ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த தேர்தலில், கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இதன் காரணமா கைச்சின்னத்தை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விரிவாக்கல் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தரும் தற்போது ஜனாதிபதியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி வரும் நபர் தலைமையில் இந்த விரிவாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து, நாற்காலி மற்றும் வெற்றிலை சின்னங்களில் போட்டியிட்டு வந்தது.
எனினும், நீண்டகாலத்திற்கு பின்னர், தனது சொந்த சின்னமான கைச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
முன்னதாக 1994ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது ஜன ஐக்கிய முன்னணி என்னும் பெயரில் நாற்காலி சின்னத்தில் போட்டியிட்டது.
இதனை அடுத்து, இந்த பொதுஜன ஐக்கிய முன்னணியில் 2004ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இணைத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என பெயர் மாற்றப்பட்டு சின்னமும் வெற்றிலை என அறிவிக்கப்பட்டது.
இத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டதுடன், சந்திரிக்கா அரசாங்கத்தில் அங்கமும் வகித்தது.
எனினும் ஓராண்டுக்குப் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது.
அதன் பின்னர் கடந்த பத்து வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியின் கீழ் வெற்றிலைச் சின்னத்தில் தொடர்ந்தும் தேர்தலில் போட்டியிட்டு வந்தது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த பொழுதிலும், அவரும் வெற்றிலைச் சின்னத்திலேயே தேர்தலை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே தனது சொந்தச் சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடும் முடிவை மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார்.