சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் பொலிஸாரா? -பிரசன்ன ரணவீர

162

கடந்த 16ஆம் திகதி சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க நாடாளுமன்றத்திற்குள் வந்தவர்கள் பொலிஸாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

சிங்கள வானொளி நிகழ்ச்சியொன்றில் பிரசன்ன ரணவீர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

நாடாளுமன்றத்தில் பார்வையாளர் தரப்பிலிருந்து வீசப்பட்ட போத்தலையே நான் எறிந்தேன். அதற்குள் மிளகாய்த் தூள் இருந்தது எனக்கு தெரியாது.

குறித்த தினத்தில் எந்த வித பொருட்களையும் உள்ளே எடுத்துச் செல்ல முடியாத வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. எனவே என்னிடமும் எந்த பொருளும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றில் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸாரை தாக்கியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அவர்கள் பொலிஸாரா என்ற சந்தேகம் எழுந்தது.

பாதாள உலகக் குழுவினருக்கு பொலிஸாரின் ஆடைகளை அணிவித்து கொண்டு வந்தது போல நான் உணர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE