சமஷ்டி ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி நிலைமை

604

625.117.560.350.160.300.053.800.210.160.70 (7)

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சமஷ்டி முறைமையில் தீர்வு காண்பதா? அல்லது ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண்பதா என்பது தொடர்பில் பாரிய சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறைமையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வுடன் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மறுபக்கம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சமஷ்டி முறைமையில் தீர்வு காணமுடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு சாத்தியம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் பேசும் மக்கள் நியாயமான தீர்வொன்றை எதிர்பார்த்திருக்கின்ற இந்த தீர்க்கமான கட்டத்தில் எவ்வாறான முறைமையில் தீர்வு காண்பது என்பது தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

குறிப்பாக சமஷ்டி முறைமையில் தீர்வு என்றாலே தென்னிலங்கையில் கடும் விமர்சனமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி இனவாத சக்திகளுக்கும் இந்த சமஷ்டிமுறையென்ற விடயமானது அவர்களின் அரசியல் காய்நகர்த்தல்களுக்கு தீனிபோடுவதாக காணப்படுகின்றது.

எவ்வாறெனினும் இந்த விடயத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் கருத்துக்களைப் புறந்தள்ளி அரசியல் தீர்வுத்திட்டம் என்ற செயற்பாட்டுக்குள் யாரும் செல்ல முடியாது.

அந்தவகையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சுவீடனின் வெளிவிவகார அமைச்சரை நேற்று முன்தினம் சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இனப்பிரச்சினைக்கான தீர்வானது சமஷ்டி முறைமையின் அடிப்படையிலேயே காணப்படவேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறைமையே சரியானது. பல வருடங்களாக நாம் முன்வைத்த சமஷ்டிமுறைமைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிட்ஸர்லாந்திலிருந்து நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவை எடுத்திருந்தோம்.

ஆனால் அரசியல்வாதிகள் சமஷ்டியை பிரிவினைவாதமாகக் கூறிவருகின்றமையினால் நிலைமை சிக்கலுக்குள்ளாகியுள்ளது. நாங்கள் நாட்டை ஒற்றுமைப்படுத்தவே சமஷ்டி முறைமையிலான தீர்வை கோருகின்றோம் எனவும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சுவீடன் அமைச்சரிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

இது இவ்வாறிருக்க இந்த தீர்வு விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனும் எதனைக் கூறினாலும் தாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லையென்றும் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சி மூலமே தீர்வு காணப்படுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டிமுறைமை மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான பிரேரணை குறித்தும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாகவும் நாம் அவசரமாக முடிவுகள் எடுக்க முடியாது. இந்த விடயத்தில் அவசரப்பட்டால் நல்லிணக்க முயற்சிகளும் அமைதியான சூழலும் குழம்பிப் போய்விடும்.

எனவே மிகவும் அவதானமாக தீர்மானங்களை எடுக்கவேண்டும். இனவாதத்தை ஊக்குவிக்கும் தீயசக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அவசரப்பட்டு தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சமஷ்டி முறைமையில் ஒருபோதும் தீர்வு காணமுடியாது. ஒற்றையாட்சி முறைமையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற அதிகாரப்பரவலாக்கலின் அடிப்படையிலேயே வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. நாட்டைப் பிரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டோம் எனவும் அமைச்சர் காரியவசம் வலியுறுத்தியிருக்கிறார்.

இவ்வாறு சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி விடயங்கள் அரசியல்வாதிகளின் பிரதான பேசுபொருளாக இன்று மாறியுள்ளன.

விசேடமாக தீர்வுத் திட்டம் என்பது தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகக் காணப்படும் நிலையில் அதனை பெற்றுக்கொடுப்பதில் தென்னிலங்கை மக்களிடையே காணப்படுகின்ற தயக்கம் மிக முக்கியமான ஒன்றாக அவதானிக்கப்படுகின்றது.

அதாவது அரசியல் தீர்வுத்திட்டமொன்றை அடைவதற்கு எப்போது பேச்சுவார்த்தைகளோ அல்லது முயற்சிகளோ முன்னெடுக்கப்பட்டால் இனவாத சக்திகள் அந்த விடயத்தை கையில் எடுத்து இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பது வழக்கமாகும்.

அதாவது சமஷ்டி முறைமையினால் நாடு பிரிவடையாது என்று தெரிந்தும் கூட இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகள் சமஷ்டி முறைமையினால் நாடு பிரிந்துவிடும் என்ற பிரசாரங்களையும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இதனால் வெற்றியை நோக்கி செல்லும் அரசியல் தீர்வு குறித்த செயற்பாடுகளும் இறுதியில் தோல்வியடைந்து விடுகின்றன.

அந்தவகையில் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு என்பது எப்போதும் மக்களைப் பொறுத்தவரையில் கானல்நீராகவே இருந்து வருகின்றது.

அதுமட்டுமன்றி, அண்மையில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்திற்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

அதாவது வட மாகாணசபையின் இந்தப் பிரேரணை நிறைவேற்றத்தினால் நாடு பிரிவடையும் ஆபத்து காணப்படுவதாகவும் வட மாகாண சபை எல்லைமீறி செயற்படுவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் அரசாங்கத் தரப்பிலும் சில அமைச்சர்கள் வட மாகாணசபை பிரேரணை நிறைவேற்றம் தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இவ்வாறு பிரேரணையை நிறைவேற்றாமல் தீர்வு தொடர்பான யோசனையை தயாரித்து அதனை அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு முன்வைத்திருக்கலாம். அதனைவிடுத்து வட மாகாண சபையானது இராஜதந்திரமற்ற முறையில் செயற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இவ்வாறு தற்போதைய நிலைமையில் இந்த ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டிமுறையான தீர்வுத்திட்டங்கள் தொடர்பிலேயே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் இங்கு மக்களின் பிரதிநிதிகள் ஒரு முக்கியமான விடயத்தை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

அதாவது நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற தேசிய பிரச்சினைக்கு தற்போதைய காலகட்டத்தில் தீர்வைக் கண்டுவிடுவது மிகவும் அவசியமாகும். தொடர்ந்தும் இந்த விடயத்தில் தாமதித்துக் கொண்டிருக்கக் கூடாது.

எனவே தென்னிலங்கையின் மிதவாதப்போக்கு கொண்ட மற்றும் சமஷ்டி முறைமை, அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆழமான தெளிவு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் சிவில் சமூக அமைப்புக்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் பேசும் மக்கள் போராடி வருகின்ற நிலையில் அதன் தாற்பரியத்தை தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக தற்போது கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வரலாற்றில் விடப்பட்டுள்ள தவறுகளைப் பாடமாகக் கொண்டு தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீர்வைக் காண்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்.

எனவே தொடர்ந்து சமஷ்டி முறைமையினால் நாடு பிரிந்துவிடும் என்ற பிரசாரங்களை முன்னெடுப்பதை விடுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது குறித்து அனைத்துத் தரப்பினரும் சிந்திக்கவேண்டும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளும் முன்னெக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அதில் உள்ளடக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் தமது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வரவேண்டும். குறிப்பாக, தென்னிலங்கையில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் பரந்த மனப்பான்மையுடன் செயற்படுவதற்குத் தயாராகுவது மிகவும் முக்கியமாகும்.

தொடர்ந்து சமஷ்டி, ஒற்றையாட்சி என்று பிரச்சினைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்காமல் நியாயமான அடிப்படையில் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

இதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

SHARE