சமுதாயத்தின் கண்களுக்கு எம்மைத் தெரிவதில்லையா? முன்னாள் போராளி

300

தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும், ஆனாலும் இன்று எவருடைய கண்களுக்கும் தெரியாத மனிதர்களாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஜேசுதாசன் கேசரிவர்மன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அம்பாறை திருக்கோயிலை சேர்ந்த ஜேசுதாசன் கேசரிவர்மன் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த இவர், 2011 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டார்.

54 வயதான ஜேசுதாசன் கேசரிவர்மனின் வலது காலும், வலது கையும் உணர்விழந்துள்ளதனால் வேலைகள் எதுவும் செய்ய முடியாத நிலையில் மிகவும் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.

தன்னைப் போன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பலர், இவ்வாறான துன்பகரமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பதற்குக்கூட வீடு இல்லாமல் தற்காலிக குடிசையொன்றை அமைத்து வாழ்ந்து வருவதாகவும் தனது குடிசைக்கு மின்சாரம் எடுக்க முடியாத நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரத்தைப் பெறுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

தனது இரண்டு பிள்ளைகளும் உயர்தரத்தில் கல்விகற்பதாகக் குறிப்பிட்ட ஜேசுதாசன் கேசரிவர்மன், அவர்களை படிப்பிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

எனினும் கையும் காலும் உணர்விழந்த நிலையிலும் கூட, தனக்குத் தெரிந்த தையல் வேலையைச்செய்து, தனது மனைவி குழந்தைகளை கவனித்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தினை கவனிக்கும் அளவிற்கு தனது வருமானம் போதாது உள்ளதாகவும் கிடைப்பதைக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது துன்பதுயரங்களை சொல்வதற்கு யாருமே இல்லை எனவும் தேர்தல் காலம் என்றால் மாத்திரமே அரசியல் கட்சிகள் தங்களது வீடுகளுக்கு கூட்டம், கூட்டமாக படையெடுப்பதாகக் குறிப்பிட்ட அவர்,

தேர்தல் முடிந்தால் எவருமே தம்மை திரும்பிப் பார்ப்பதுமில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட தங்களைப் பற்றி சிந்திப்பதில்லை என கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தங்களுக்கு இதுவரைக்கும் எந்தவிதமான உதவிகளைக்கூட செய்து தரமுடியவில்லை என்பது மிகவும் மன வேதனை தரும் விடயம் எனக் குறிப்பிட்டார்.

தான் கஷ்டப்பட்டு வாழ்ந்தது போன்று தங்களது குழந்தைகளும் வாழக்கூடாது என்பது தனது விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், தங்களது குறைகளை யாரிடம் சென்று கூறுவதென்று தெரியாத அளவிற்கு புனர்வாழ்வு பெற்று வந்த பலர், இவ்வாறான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான தமிழர்களை கொண்ட பொத்துவில் – திருக்கோயில் – விநாயகபுரம் கிராமம் பெயர்பெற்று விளங்குகின்றது. தமிழர்களது போராட்ட வரலாற்றில் அம்பாறை மாவட்டம் முக்கிய இடத்தினை பெற்றதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் சான்றாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
3

1

2

SHARE