சமூக ஊடகங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருத்தம் வெளியிட்டுள்ளார்.
வணக்கத்திற்குரிய சோபித தேரர் தொடர்பிலும் அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் நாட்டில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் தொழில்நுட்பம் அநேக சந்தர்ப்பங்களில் பிழையான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேரடியாக விவாதங்கள் ஒளிபரப்புச் செய்யப்படும் போது உறுப்பினர்கள் தமது நேரத்தை எவ்வாறு பயன்படுத்தி மக்களுக்கும் நாட்டுக்கும் செய்திகளை சொல்ல வேண்டும் என்பது குறித்து புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலமர்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சிக்கான சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சில முக்கிய பொறுப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக புத்திஜீவிகள் உள்ளிட்ட கல்விசார் சமூகம் நாட்டின் நன்மைக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் தொழில்நுட்ப அறிவினைப் பெற்றிருப்பது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.