சமூக வலைத்தளத்தினூடாக வாழ்க்கையை சீரழிக்கும் சிறுவர்கள்

147

இன்று பெரும்பாலான குழந்தைகளின் கையில் கைப்பேசி இருக்கிறது.

தங்களது குழந்தை கைப்பேசியை தானாக இயக்குவதும் விளையாடுவதும் பெற்றோருக்குப் பெருமையாக இருக்கிறது. சிறு வயதில் முன்னோர்கள் விளையாடிய எல்லா விளையாட்டுகளும் செல்போனில் கிடைத்துவிடுகின்றன.

இதனால் வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குறைந்துபோகிறது.

கைப்பேசியில் விளையாட்டுகளை விளையாடி, விளையாடி அலுத்துவிடும்போது அவர்களின் கவனம் சமூக வலைதளங்கள் பக்கம் திரும்புகிறது.

பள்ளியில் எந்தக் குழந்தைக்கு பேஸ்புக்கில் அதிக நண்பர்கள் இருக்கிறார்களோ, அதுதான் மற்ற குழந்தைகளுக்கு ஹீரோ. விடுமுறை தினங்களில் வாட்ஸ்அப்பில் நாள் முழுக்க சாட் செய்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.

எல்லாத் தகவல்களையும் கொட்டித்தரும் இணையத்தில் தேவையற்ற செய்திகளுக்குப் பின்னால் போகிறார்கள்.

ஆண், பெண் உடல் பற்றிய புரிதல்கள் இன்றி தவறான இணையதளங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். காதல், காமம் போன்ற விஷயங்கள் மிக இளம் வயதிலேயே இவர்கள் மூளைக்குள் சென்றுவிடுகிறது.

ஆணும் பெண்ணும் தங்களை நன்றாகப் புரிந்துகொண்டு இயல்பாக மலரவேண்டிய காதலை யாரென்றே தெரியாதவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக்கில் காதலித்து, பேஸ்புக்கிலேயே பிரேக் செய்துகொள்கிறார்கள்.

பேஸ்புக் மூலம் முகம் தெரியாத ஆட்களிடம் பழகும் சிறார்கள், வாழ்க்கையை சீரழிக்கும் சில பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள்.

10 வயது சிறுவனுக்கு பேஸ்புக்கில் 8 காதலிகள் இருக்கிறார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுவன் மாறி மாறி இவர்களுடன் சாட்டிங், ஆபாச புகைப்படங்கள் பகிர்ந்துகொள்ளுதல் என பேஸ்புக்கிலேயே இவனது வாழ்க்கை சென்றுள்ளது.

காதல் என்றால் என்ன என்பது கூட விவரம் தெரியாத இச்சிறுவன், பேஸ்புக்கில் தனக்கு வரும் காதல் தூதுக்கு சம்மதம் தெரிவித்து, அவர்களுடன் காதல் மொழியில் உரையாடுகிறான். நாட்கள் செல்ல, மோசமான உரையாடல்கள், ஆபாச புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள வழிவகுக்கின்றன.

பெற்றோரும் பள்ளி விடுமுறை நாட்களில்கூட அலுவலக வேலையே கதியாக இருப்பதால், அவர்களும் குழந்தையின் அருகாமையில் இருப்பதில்லை.

இப்படிப்பட்ட குழந்தைகளை தனிமை வாட்ட ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் சமூகவலைதளங்கள், கைப்பேசி அவர்களின் உற்றத் தோழர்களாக மாறிவிடுகின்றன.

பதினெட்டு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு கைப்பேசி வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பேஸ்புக் மனிதர்களை மறந்து உண்மையான மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் வேறுபாடுகள், உறவுநிலை மேம்பாடு குறித்து ஆசிரியர்கள் பள்ளிகளில் பேசலாம். இது, குழந்தைகளுக்கு ஓரளவுக்குத் தெளிவைக் கொடுக்கும்.

SHARE