சம்பந்தனின் அரசியல் போக்கை விரும்பாத இந்தியா விக்னேஸ்வரனைத் தலைவராக்க முயற்சி

282

அமெரிக்காவிலிருந்து அரச பிரதிநிதிகள் அடிக்கடி இலங்கை வந்துகொண்டிருப்பதும் ஸ்ரீலங்காவின் அரச பிரதிநிதியாகவும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களையும் சந்தித்துச் செல்வதுந் தெரிந்ததே. சம்பந்தன் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலும் முதன்மை வகித்துக்கொண்டே எதிர்பாராதவிதமாக அவருக்குக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியென்னும் வகிபாகத்துக்கு இயைபாக அமெரிக்கப் பிரதிநிதிகளைச் ஸ்ரீலங்கா என்னும் அரசியல் அதிகார வரம்புக்குள் நின்று வரவேற்பதும் அவ்வமெரிக்கப் பிரதிநிதிகள் ஒரு மாதகாலத்துக்குள்ளேயே அறுவர் இலங்கைக்குள் பிரசன்னமாகியமையும் இந்திய மத்திய அரசுக்கு இலங்கை மீது வெறுப்பையுருவாக்கியுள்ளது. அமெரிக்க அரச பிரதிநிதிகளின் தொடச்சியான இலங்கை விஜயம் இலங்கை மீது இந்தியாவுக்குச் சீற்றத்தை வரவழைத்திருப்பது சர்வதேச அரசியல் பின்புலத்தில் இயல்பானவொன்றே.

ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தமிழர் சுயமரியாதை, சுய நிர்ணயம் என்பவை தொடர்பில் அமைந்த நீதிநெறி சார்ந்த நிலைப்பாடு சம்பந்தன் அவர்கள் ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் நிலையில் தளர்வடைந்த நிலையில் இந்தியாவின் உளவுப்பிரிவான றோ அமைப்பினர் ஸ்ரீலங்கா அரசின் அமெரிக்க உறவு தொடர்பிலான வெறுப்பைச் சாதிப்பதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் அவர்களை ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியென்னும் அவருடைய வகிபாகத்தைச் சாதகமாக வைத்தும் அவரும் ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியென்னும் நிலையில் இலங்கையரசின் உத்தியோகபூர்வமான அனுசரனையை அமெரிக்க அரச பிரதிநிதிகளுக்கு வழங்கியமையும் இந்திய மத்திய அரசுக்கு அன்னார் மீதும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

எனவேதான் இந்திய மத்திய அரசானது சம்பந்தன் தொடர்பில் அவருடைய தமிழ் மக்களுக்குள் உள்ள அரசியல் செல்வாக்கை வீழ்ச்சியடையவைக்கவேண்டுமென்னும் நோக்கில் இலங்கையில் வடபுலத்து அரசியல் பின்புலத்துக்குள் சம்பந்தன் அவர்களுக்கு எதிராக ஓர் அமைப்பை உருவாக்கிச் சம்பந்தன் அவர்களின் அரசியல் பலத்தைக் குறைக்கவேண்டுமென்னும் நோக்கில் விக்னேஸ்வரன் அவர்களோடு தொடர்புகொண்டு சம்பந்தன் மீதான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களோடும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற வடக்கிலுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எதிரணியினரானவர்களையும் இணைத்துத் தமிழர் பேரவை என்னும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டு விக்னேஸ்வரன் அவர்கள் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களும், மாற்றுத் தமிழ்க் குறியீட்டுச் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் அவ்வமைப்பின் உறுப்பினர்களாகவுந் தெரிவுசெய்யப்பட்டுமிருக்கின்றார்கள். சம்பந்தன் மீதான இந்திய மத்திய அரசின் விரோதமான இந்நடவடிக்கைக்குத் தமிழ்நாட்டு அரசியல் பின்புலத்தின் ஒரு பகுதியும் அனுசரணையாக இருந்ததற்கான சமிக்ஜையும் தென்படுகின்றது. ஏனெனில் தமிழர் பேரவை என்னும் பெயர் சூட்டவே அந்த அமைப்பின் உருவாக்கத்திற்கு இந்திய மத்திய அரசானது தமிழ்நாட்டு அரசியலிலுள்ள இந்திய தேசிய உணர்வோடு இயைந்த தமிழ் உணர்வின்பாற்பட்ட தமிழ் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளத் தவறியிருக்கமாட்டார்களெனவேகொள்ள முடிகின்றது.

ஆகையால் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களின் உருவாக்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சீர்குலைத்துச் சின்னாபின்னமாக்கித் தமிழர் உரிமைகளுக்கான அரசியல் நகர்வை மிகவும் பலவீனப்படுத்திவிடக்கூடிய ஏதுநிலையுள்ளதால் இவ்வாறான அமைப்புக்களின் உருவாக்கத்தை இலங்கைத் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகவும் முற்றுமுழுதாகவும் நிராகரிப்பதே அறிவுடமையாகும்.

Wigneswaran-with-Sambanthan

 

SHARE