மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆகவே அவரது கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும். முடியுமாகவிருந்தால் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் உதயங்க வீரதுங்கவை நான் அழைத்து வருவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அப்படியாயின் எங்கே உதயங்க வீரதுங்க? ஏன் மஹிந்த அவரை இன்னும் அழைத்து வரவில்லை. எனினும் அவர் தற்போது டுபாய் பொலிஸின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவர் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் தெரிவித்தார்.