திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் அனல்மின்நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் பசுமை திருகோணமலை அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர் சரவணன் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில், அனல்மின்நிலையம் அமைக்கும் செயற்பாடு தொடர்பாக மூதூர் கிராம புத்திஜீவிகளிடம் கருத்துக்களைப் பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரனினால் சம்பூர் அனல்மின்நிலைய திட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த தனிநபர் பிரேரணை தொடர்பாக கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவெடுக்கலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு கொண்டுவரப்படவிருந்த தனிநபர் பிரேரணை அரசியல் தலைவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளதால், பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே அனல்மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயவுள்ளனர்.