சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு அமெரிக்கா நிதியுதவி

260
புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்த நிஷா பிஸ்வால்,  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து உரையாடினார்.

அதன் பின்னர் அமைச்சில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே நிஷா பிஸ்வால் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான வளங்களை அமெரிக்க அரசு மீள்குடியேற்றத்துக்கும் கல்விக்காகவும் சம்பூரில் உள்ள மக்களுக்கு வழங்கவுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக எல்லா விடயங்களிலும் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிஷா பிஸ்வாலின் முன்னைய விஜயத்தின் போது இலங்கை தொடர்பில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருந்த அவர், இன்று மென்மையான போக்கை வெளிப்படுத்தும் வகையில் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதன்மூலம் அமெரிக்கா அரசாங்கம் எதிர்வரும் காலப்பகுதியில் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணக்கமான போக்கைக் கையாளத் தயாராக இருப்பது புலப்படுத்தப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE