முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதியுத்தத்தின்போது சரணடைவோரைப் பாதுகாப்பதற்கு ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் உதவிகோரிய போதிலும் எவரும் உதவிவழங்க முன்வரவில்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின்போது சரணடைவோர் தொடர்பில் முழுப்பொறுப்பு வகித்தவரான பஸில் ராஜபக்ச சர்வதேச நாடுகள் செயற்பட்ட முறை தொடர்பாக குற்றம் சாட்டினார்.
தமிழ் மக்கள் மீது உண்மையான பற்று இருந்திருந்தால் அதனை இறதிப்போரின்போது வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும், தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே ஜெனீவாவின் எதிர்பார்ப்பு அல்ல, மாறாக மஹிந்த ராஜபக்சவை வீழ்த்துவதே அதன் இலக்காக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியுத்தத்தில் இடம்பெற்ற விவகாரங்கள் தொடர்பாக பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாவது….
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் ஸ்ரீலங்கா மீதான ஜெனீவாவின் அழுத்தங்கள் குறைவடைந்துவிட்டன.
இது உண்மை என்பதே எனது நிலைப்பாடாகும். ஏனென்றால் உண்மையாக விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான நோக்கத்திலேயே தவிர, தமிழ் மக்களுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ இந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.
தமிழ் மக்கள் மீது உண்மையான பற்று இருந்திருந்தால் அதனை ஜெனீவா ஆரம்பம் முதலே வெளிக்காட்டியிருக்கலாம்.
இறுதி யுத்தத்தின்போது மோதலில் ஈடுபடும் இரண்டு சாராரைத் தவிர ஏனைய சாதாரண மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கையை ஜெனீவாவிற்கும், வேறு சர்வதேச அமைப்புகளுக்கும் விடுத்திருந்தோம்.
எனினும் அதனை அவர்கள் ஏற்கவுமில்லை, உதவி செய்ய முன்வரவுமில்லை. அந்த மக்கள் மீது பற்று அவர்களுக்கு இருக்கவில்லை.
அதன் பின்னர் இந்த அழுத்தங்களை மஹந்த ராஜபக்ச அரசாங்கம் வீழ்ந்துபோவதற்கான நோக்கத்தில் பிரயோகித்ததோடு அந்த நோக்கம் நிறைவேறிய பின் திடீரென அந்த அழுத்தங்கள் மாற்றம் பெற்றன.
இன்று அந்த அழுத்தங்கள் இல்லாமல் போனமைக்கான காரணம் என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துவிட்டதா? இன்று பேச்சும் இல்லை, மூச்சும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தேவையான விடயம் நடந்தேறியிருக்கிறது.
யுத்தம் என்பது எந்த நேரமும் மரணம், துக்கம் நிறைந்ததாகும். தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு நீதி கிடைக்கச்செய்ய வேண்டும்.
துப்பாக்கி மூலம் மாவு இடிக்க முடியாது. மாறாக சூடுகளையே மேற்கொள்ளலாம். அவ்வாறு செய்தால் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம். அவ்வாறான சூழ்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக அறிந்தால் அதற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா தொடர்பில் அன்று மாற்றுக் கருத்தைக் கூறியவர்கள் இன்று முன்னேற்றமடைந்திருப்பதாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். என்னமாதிரியான விடயங்களில் ஸ்ரீலங்கா முன்னேற்றமடைந்திருக்கிறது என்பது எனக்கு அறியமுடியாதுள்ளது – என்று தெரிவித்தார்.