இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.
இந்நாட்டில் பௌத்த சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக இருந்த போதிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றும் மக்கள் சிறுபான்மையினராக நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும் இந்நாட்டு மக்கள் மத்தியில் இன மத ரீதியான திட்டமிட்ட அடிப்படையிலான மேலாதிக்க சிந்தனையோ, செயற்பாடுகளோ கடந்த காலங்களில் காணப்படவில்லை.
சுதந்திரத்திற்கு பின்னர் சுமார் 30 வருட கால யுத்தத்திற்கு நாடு முகம் கொடுத்தும் அப்படியான நிலைமை ஏற்படவில்லை.
இந்த யுத்தம் 2009ல் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடரந்து 2010 முதல் திட்டமிட்ட அடிப்படையிலான இன, மத மேலாத்திக்க சிந்தனைகளும் செயற்பாடுகளும் தலைதூக்கத் தொடங்கின.
மூன்று தசாப்த கால யுத்தத்தில் நாடு இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த யுத்தம் இந்நாட்டை பொருளாதார ரீதியில் மேலு-ம் மூன்று தசாப்தங்கள் பின்தள்ளியுள்ளது.
அப்படியான அனுபவத்தைப் பெற்று இருந்தும் கூட இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் சீர்குலைத்து மக்கள் மத்தியில் சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் இன, மத ரீதியிலான காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் இடம் பெறத் தொடங்கின.
இச்செயற்பாடுகளின் தாக்கங்கள், விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருந்தும் கூட அச்செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன வாத. மத வாத நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளியெறியக் கடந்த ஆட்சியாளர்கள் தவறியதால் சிறுபான்மையினரின் இன, மத கலாசார அடையாங்கள் மீது மாத்திரமல்லாமல் இந்துக் கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத்தலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்றன.
இந்நாட்டில் இன வாத. மத வாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததன் காரணமாக உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதோடு இந்நாடு குற்றவாளி கூண்டிலும் நிறுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் நாட்டு மக்கள் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு கடந்த ஆட்சியாளர்களின் கொள்கையைத் தோற்கடித்து நாட்டில் வழமை போன்று ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழவே தாம் விரும்புகின்றோம்.
எம்மால் பிரிந்து தனிமைப்பட்டு வாழ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2015ல் நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து நாட்டில் நல்லாட்சியை உருவாக்கினர்.
தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி நல்லாட்சி அரசாங்கம் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளைப் பரந்தடிப்படையில் முன்னெடுத்துள்ளன.
இருந்த போதிலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 32வது அமர்வில் உரையாற்றிய ஆணையாளர் செய்க் ராத் ஹுசைன் இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாத. மதவாத செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
தற்போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ‘சிறுபான்மையினருக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன்படி கடந்த ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத. மதவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டதன் விளைவுகளுக்கு நாடு என்ற வகையில் தற்போதைய அரசாங்கமே முகம் கொடுக்கின்றது.
இருப்பினும் ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் இனவாத. மதவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்க இடமளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
இவ்வாறான சூழலில் சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலக முஸ்லிம் லீக்கின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் கொழும்பில் ஆரம்பமானது.
இம்மாநாட்டைப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
இந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பேராளர்களும் கலந்து கொண்டுள்ளீர்கள்.
உங்களுக்கு முன்னிலையில் நான் ஒரு உத்தரவாதத்தை வழங்குகின்றேன்.
இலங்கையில் இனிமேல் இனவாதத்திற்கு இடமில்லை. இனவாதத்தை இலங்கை எதிர்க்கின்றது. இனவாத செயற்பாடுகளுக்கு இங்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது’ என்று உறுதிபடக் கூறினார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை இந்நாட்டை உண்மையாகவே நேசிக்கும் சகல மக்களும் வரவேற்றுள்ளனர்.
இனவாதமற்ற மதவாதமற்ற நாடாக இந்நாட்டைக் காணவே இந்நாட்டை உண்மையாகவே நேசிக்கும் அனைத்து பிரஜைகளும் எதிர்பார்க்கின்றனர்.
அதன் ஊடாகத்தான் இந்நாடு சுபீட்சம் அடையும். அதனால் இனவாதம். மதவாதம் அற்ற நாடாக இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்பவென எல்லா பேதங்களுக்கும் அப்பால் சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதே இன்றைய உடனடித் தேவை.