இலங்கையின் இணக்கப்பாட்டோடு நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் முடிந்ததன் பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடாத்தியிருந்தது.
இதில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில், மாவை சேனாதிராசா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
த.தே.கூவினர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் முழுவடிவமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் திருத்த யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் திருத்த யோசனைக்கு 25 நாடுகள் இணை அனுசரணையை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், அமெரிக்காவின் திருத்த யோசனையில் பல பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகியனவற்றை, மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த யோசனைக்கு அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, கிறீஸ், லத்தீவியா, மொன்டநீகிரோ, போலந்து, ரூமேனியா, மசிடோனியா, பிருத்தானியா, அயர்லாந்து மற்றும் இலங்கை உட்பட்ட 25 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.
இந்த யோசனைக்கு அமைய இலங்கையின் நீதித்துறையில் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தி அனைத்து சமூகங்கள் மத்தியிலும் நம்பிக்கையை கட்டி எழுப்ப இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளமை வரவேற்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய நீதிப்பொறிமுறை ஒன்றை சிறப்பு சபை ஒன்றுடன் நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியமையும் இந்த யோசனையில் வரவேற்கப்பட்டுள்ளது.
இந்த நீதிப் பொறிமுறைக்குள் சுயாதீனமான இலங்கையின் இறைமை மற்றும் பக்கசார்பின்மையை கொண்ட ஆட்கள் தலைமையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் பாதுகாப்பு சட்டதரணிகள் அதிகாரம் கொண்ட வழக்கு தொடுனர்கள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்ட சிறப்பு சபை அலுவலகம் உள்ளடக்கப்படவுள்ளது.
ஒற்றுமை என்பவற்றை அமெரிக்க யோசனை ஏற்றுக்கொள்கிறது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தல்கள் மற்றும் அமைதியான ஆட்சி கையளிப்புகள் இந்த அறிக்கையில் வரவேற்கப்பட்டுள்ளன.
19வது அரசியல் சட்ட திருத்தத்தின் கீழ் ஜனநாயக விளிமியங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் கையூட்டல், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை தொடர்பில் முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில், குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த பகுதிகளில் உட்கட்டமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் போன்ற நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றமை வரவேற்கத்தக்க அம்சம் என அமெரிக்காவின் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அனைத்து இன மக்களும், மதம், இனத்துவம் மற்றும் அமைதியான ஒன்றுபட்ட நிலப்பரப்பில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சர்வதேச சட்டங்கள், மனித உரிமை சட்டங்கள், சர்வதேச அகதிகள் சட்டம் என்பன கவனிக்கப்பட வேண்டும்.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி வன்முறைகளால் உயிரிழந்த அனைத்து இன மற்றும் மதத்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட அமைதிப் பிரகடனம், அமெரிக்க யோசனையில் வரவேற்கப்பட்டுள்ளது.
நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் மனித உரிமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதிக்க வேண்டும்.
அதிஉயர் பாதுகாப்பு வலையங்களை மீள் பரிசீலனை செய்தல் மற்றும் மக்கள் தமது சொந்த காணிகளில் குடியேற அனுமதித்தமை என்பன வரவேற்கத்தக்கன.
அரசாங்கத்தின் உண்மையை கண்டறியும், நடவடிக்கைகளுக்கு யோசனையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் விசாரணை பொறிமுறை ஒவ்வொன்றிற்கும், நிதி, தொழில்நுட்ப உதவி போன்றவற்றை கிடைக்கச் செய்தல் வேண்டும்.
இதனை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் உறுதிப்படுத்தும்.
இந்த நிலையில், முழுமையான பொறுப்புக் கூறலை, மேற்கொள்ளும் போது, அனைத்து தரப்பும் மேற்கொண்ட கடுமையான குற்றங்களில் நீதி காணப்பட்டு நல்லிணக்கத்தை எட்ட முடியும்.
விடுதலைப் புலிகளின் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகம் குறித்தும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் அவசியமானது.
இதேவேளை, அரசாங்கம் இனப்பிரச்சனை தீர்விற்காக தேவையான அரசியல் அமைப்பு மாற்றங்களை மேற்கொண்டுள்ளமை அமெரிக்க யோசனையில் வரவேற்பை பெற்றுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் அரசியல் அதிகார பரவலாக்கமானது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், மனித உரிமை காப்பையும் ஏற்படுத்தும் என யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு தரப்பினரின் அனைத்து பிரிவுகளுக்கும் மனித உரிமை மீறல், சித்திரவதை, பாலியல்வன்புணர்வு உட்பட்ட குற்றங்கள் தொடர்பான தண்டனை தொடர்பில் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை, அமெரிக்க யோசனையில் வரவேற்பை பெற்றுள்ளது.
இறுதியாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் சிறப்பு ஏற்பாடுகளுக்கு இணங்க அறிவுரைகளையும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வதில் அக்கறை கொள்ள வேண்டும் என அமெரிக்க யோசனையில் கோரப்பட்டுள்ளது