சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இலங்கை வருகை

268
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வர்த்தகக் குழுவினர் இலங்கையில் நடக்கவுள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேலு உள்ளிட்ட 55 பேர் கொண்ட வர்த்தக தூதுக் குழுவினர், இன்று முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தெரிவிக்கையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் தமிழகத்தில் இருந்து இருதரப்பு ஏற்றுமதி, இறக்குமதி, தொழில்துறை கூட்டு முதலீடுகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்வர்.

யாழ்ப்பாணத்தில் ஜனவரி 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியை வர்த்தகக் குழுவினர் பார்வையிட்டு, இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள தொழில் வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வடக்கு மாகாணத்தின் தொழில் முதலீட்டுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் இதர வசதிகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க உள்ளார் என்றார்.

1360698363Untitled-1

SHARE