தமிழ் இனத்தின் நரகாசுரனை அடையாளம் காண்போம்: ஈழத் தமிழரின் போராட்டத்தில் இந்திய நரகாசுரனின் (5) பஞ்சமா பாதகச் செயல்கள்
முப்பது வருடங்களாக இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு பட்டறிவு வரவில்லை போலும் . எமது இனம் உரிமைக்கான தீப ஒளியை காணவேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை அடையாளம் காணவேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின் நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம் பெற்ற சில முக்கிய சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் . இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
- 1987ம் ஆண்டு அமைதி படை என்ற பெயரில் இலங்கையினுள் நுழைந்த இந்திய இராணுவம் பிரபாகரனை கொல்வதற்கு அவரது இரகசிய இருப்பிடத்தை இலக்கு வைத்து கொலை ஆயுதங்களுடன் கொமாண்டோ படை அணியினரை யாழ் மருத்துவ பீடத்துக்கு அருகில் இறக்கி நம்பிக்கை துரோக முயற்சியில் ஈடுபட்டது (1). புலிகள் உஷாராக இருந்தமையினால் இந்த இந்திய சதி முயற்சிமுறியடிக்கப் பட்டது.உடனடியாக இந்தியா சயனைட் குப்பியுடன் திரிந்த புலிகளின் தலைவரை தாம் கொல்ல முயலவில்லை என்றும் உயிருடன் பிடிக்கவே முயற்சி செய்ததாகவும் கதை அளந்தது இந்த சீண்டலின் பின்பு தான் முழு அளவிலான புலிகள் இந்தியப் படை யுத்தம் ஆரம்பமானது என்பது வரலாறு. பொது மக்கள் இயன்றளவு பாதிக்கப்படாமல் யுத்தம் நடத்தப் பட வேண்டும் என்ற யுத்த தர்மத்தையும் சர்வதேச நெறிமுறைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு சகட்டுமேனிக்கு பொதுமக்களைக் கொன்று தள்ளியது. வயது முதிர்ந்த கிழவிகளையும் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தது. யாழ் போதனா வைத்தியசாலையினுள் நுழைந்து தமது உயிரை பொருட் படுத்தாது காயமடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த வைத்தியர்களையும் ஏனைய சுகாதார ஊழியர்களையும் படுகொலை செய்தது. கொலை வெறியாட்டம் முடிந்ததும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவம் வீடுகளில் புகுந்து வெளிப்படையாகவே பலாத்காரமாக பொருட்களைக் கைப்பற்றிக் கொள்ளையில் ஈடுபட்டது. களவு எடுத்த பொருட்களுக்கு இந்தியாவில் உரிமை கோருவதற்காக ஸ்டான்லி வீதியில் இந்திய களவாணி படையினர் வரிசையில் நின்று கடைக் காரர்களிடம் களவெடுத்த பொருட்களைக் காட்டி பொய்யான சிட்டைகளை பெற்றுச் செல்லும் போது அமைதிப் படை தளபதிகள் அமைதி காத்து கொள்ளைக்கு உடந்தையாகினர்.
- 2000 ஆண்டு மே மாதம் ஆனையிறவை அழித்து புலிகள் ஆயுதபலத்திலும் மனோபலத்திலும் உயர்ந்து நின்ற காலம் (2) : பலாலியை நெருங்க முற்பட்டபோது இந்தியா நேரடியாக புலிகளை எச்சரித்து தடுத்து நிறுத்தியது (3). இதன் பின்பு இந்தியா புலிகளின் ஆயுத வழங்கல் கப்பல்களை நேரடியாகவும் மறைமுக தகவல்களை வழங்கியும் அழித்து அதே நேரத்தில் இலங்கை அரசாங்கத்தை பலப் படுத்துவதற்கு பல்வேறு ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கியது(4) (5). பலாலி முகாமை அந்த நேரத்தில் கைப்பற்றி இருந்தால் தமிழர் வரலாறு நிச்சயமாக மாறி இருக்கும்.
- 2009 புலிகளை அழிக்க இந்தியா முழுமூச்சாக ஆயுதங்களும் ஏனைய உதவிகளும் வழங்கி உதவி செய்தது. தொடர்ச்சியாக இந்தியா இரகசியமாக அனுப்பிய உதவிகளை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ் நாட்டில் அவற்றை பல இடங்களில் மறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள் (6)
- 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் கனடாவுடன் இணைந்து பலநாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முழுமூச்சுடன் தோற்கடித்து (7) இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையை வராமல் தடுத்து நிறுத்தி போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையைப் பாதுகாத்து 2 வருடத்துக்கு மேலாக தமிழர் தடுப்பு முகாம்களில் இருக்கவும் அதை தட்டிக் கேட்ட என்னைப் போன்றவர்களையும் ஒடுக்குவதற்கும் துணை நின்றதும் இந்தியாவே தான்.
- 2014 இலும் இலங்கையில் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை அமரிக்கா ஆதரவு நாடுகள் கொண்டுவந்த போது அதை எதிர்த்து வாக்களித்து தன்னுடைய உண்மையான வடிவத்தை வெளிக்காட்டியது (8). இன்றும் சர்வதேச விசாரணையின்றி எமது உறவுகள் காணாமல் போனவர்களை தேடும் நிலையில் இருப்பதற்கும் இந்தியாவே காரணம்.
இவ்வளவு அநியாயமும் தமிழர்களுக்கு எதிராக இழைத்தபின்பும் தமிழரின் மறதியை மூலதனமாகக் கொண்டு யாழ் நகரிலேயே தனது துணை தூதரகத்தை அமைத்து பல்வேறு சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இப்போதும் புலிகள் எங்கே மேலெழுந்து வந்துவிடுவார்கள் என்று ஐயம் கொண்டு உளவாளிகளை வைத்து பல கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை விட தமிழர் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கு நண்பேன்டா இசை நிகழ்ச்சி (9) மீன் வியாபாரம் உட்பட பல நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது (10). இலங்கை நீதிமன்றம் சூழல் பாதிப்பு ஏற்படுமென காரணம் காட்டி நிராகரிக்கும் வரை சம்பூரில் வாழ்ந்த தமிழ் மக்களை துரத்தி அடித்துவிட்டு தனது இலாபத்துக்கு அனல் மின்நிலையம் அமைக்க துடித்தது (11) . உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழர் வாழும் பகுதியில் இலவச மருத்துவ முகாம் உளவியல் சிகிச்சை வழங்குவதற்கு அனுமதி கேட்டு நாடகம் ஆடுகிறது. மீனவர் வடிவில் உளவாளிகளை வட இலங்கையினுள் அனுப்ப முயல்கிறது(12) . பல சூழ்ச்சிகள் மூலமாக சீன ஆதரவு மஹிந்த குழுவினரை ஆட்சியில் இருந்து அகற்றி அதற்கு நன்றிக்கடனாக வடக்கிலும் தெற்கிலும் பல அரசியல்வாதிகளையும் கையுக்குள் போட்டு வைத்து கொண்டு இருக்கிறது (13).
இப்போது கூறுங்கள் தமிழரின் உரிமை தீபத்தை அடைய தடையாக இருக்கும் உண்மையான நரகாசுரன் யார்?