சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பின் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா அரசாங்கம், துருக்கியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலுள்ள சவுதி தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டாரென துருக்கி தெரிவித்தமைக்கு காணொளி அல்லது ஏதேனும் உறுதியான ஆதாரங்களை வெளிப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபிய அரசாங்கமே குறித்த கொலையை மேற்கொண்டுள்ளது என துருக்கி உறுதியாக குறிப்பிடுமிடத்து அதற்கான ஆதரங்களை வழங்குவது உவப்பானதென ட்ரம்ப் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்மாதம் இரண்டாம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி தொடர்பிலும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள ஊடகங்களின் சுதந்திரம் தொடர்பிலும் வொஷிங்டனின் செய்தியாளர் கரன் அட்டியாஹ் தனது பத்திரிகையில் எழுதியுள்ளார்.
மேலும், ஜமால் பாதுகாப்பாக மீண்டும் திரும்பி வருவாரென தான் நம்புவதாகவும் செய்திக் கட்டுரையில் கரன் அட்டியாஹ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சவுதி அரேபியா மீது உலக நாடுகளின் ஊடகங்களும் துருக்கியும் சுமத்திவரும் குற்றச்சாட்டை சவுதி அரசாங்கம் முற்றாக மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.