சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் கடும் போட்டிகளுக்கிடையே சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது பிங்க் வைரம்.
இதுவரை ஏலம் விடப்பட்ட இளஞ்சிவப்பு வைரங்களில் இதுவே சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏலம் எடுப்பவர்களில் இருவர் இந்த வைரத்தை தமதாக்கிக்கொள்ள இறுதிவரை போராடியதாகவும் கடைசியில் 42.8 மில்லியன் டொலர்களுக்கு தொலைப்பேசி வாயிலாக ஆசியாவை சேர்ந்த ஒரு வணிகர் அந்த வைரத்தை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வைரத்தை ஏலம் எடுக்கும் பொருட்டு அந்த வளாகத்தில் 150 பேர் ஆர்வமுடன் குழுமியிருந்தனர். ஆனால் தொலைப்பேசியிலேயே ஏலத்தை முடித்து முகம் தெரியாத நபர் வைரத்தை கைப்பற்றியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இந்த வைரம் கண்டெடுக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் குறைவான கால அளவே ஆனதாகவும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு இந்த வைரம் சொந்தமாக இருந்தது எனவும் தெரிவிக்கின்றனர்.
Unique Pink என அறியப்படும் இந்த வைரத்திற்கு அமெரிக்காவின் ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ‘Fancy Vivid pink’ என பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.