சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல். றமணன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவு நாள்
லெப். கேணல். றமணன்
( வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் )
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்
தாக்குதல் தளபதி.
மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போது , அவனுடைய சிறு வயது கருதி படைத்துறைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அங்கே பொதுக்கல்வியும் படைத்துறை சார்ந்த கல்வியும் சில வருடங்கள் பயின்ற கோணேஸ்வரன், அடிப்படை பயிற்சி பெற்று றமணன் என்ற போராளியாக செயற்படத் துவங்கினான். 1993 ல் சிறுத்தைப் படையணியில் இணைக்கப்பட்டு ஆங்கே நீண்ட கால பயிற்சியில் ஈடுபட்டு தேர்ந்த போராளியாக தாக்குதலணியில் இணைந்தான் . மணலாற்றுக் காடுகளில் றமணனுடைய பாதங்கள் வேவு நடவடிக்கைகளிலும் களச் செயற்பாடுகளிலும் ஓய்வின்றி நடந்தன. பல இராணுவ முகாம்கள் மீதான அதிரடித் தாக்குதல்களில் மிகுந்த ஊக்கத்துடன் றமணன் களமாடி ஆர்வத்துடன் களத் திறன்களை வளர்த்துக் கொண்டான்.
1995 ல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்ட பொழுது றமணனும் இளம் அணித் தலைவராக படையணியில் இணைந்தான் .வேவு நடவடிக்கைகளிலும் பயிற்சித் தளங்களிலும் றமணன் திறமுடன் செயற்பட்டான் . ஓயாத அலைகள் – 1 சமரில் றமணன் தாக்குதலணியில் சிறப்பாக செயற்பட்டான் . 1997 ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர்களில் இளம் தளபதி ராகவனின் பொறுப்பின் கீழ் செக்சன் லீடராகவும் வேவுப் போராளியாகவும் ஓய்வின்றி செயற்பட்டான் . 1998 துவக்கத்தில் படையணி உருத்திரபுரம் முன்னரண் வரிசையில் கடமையிலிருந்த போது, கனரக ஆயுதங்கள் அணி லீடர் இராசநாயகத்துடன் நின்று செக்சன் லீடராக செயற்பட்டான் . உருத்திரபுரம் சண்டையில் றமணன் செக்சன் லீடராக திறமுடன் களமாடி திறமுடன் களமாடி தளபதிகளின் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டான்.
ஓயாத அலைகள்-2 கிளிநொச்சி மீட்புச் சமரில் றமணன் செக்சன் லீடராக களமிறங்கினார். மூர்க்கமான தாக்குதல்களால் எதிரியின் பாதுகாப்பு நிலைகளைத் தகர்த்து, தொடர் காவலரண்களை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்த றமணன் தவறுதலாக எதிரியின் நிலக் கண்ணிவெடிகளுக்குள் இறங்கி விட்டார். ‘ தளபதிகள் மன்னிப்பர் , ஆனால் வெடிகுண்டு மன்னிக்காது ‘ என்ற உண்மையின்படி அவனுடைய காலடியில் நிலக் கண்ணியொன்று வெடித்தது. இதனால் பாதத்திற்கு மேலே கால் துண்டாகி இரத்த வெள்ளத்தில் விழுந்தான் றமணன். உடனடியாக சக போராளிகள் அவனை மீட்டு களமருத்துவ நிலையத்தில் சேர்த்து அவனுடைய உயிரைக் காப்பாற்றினர்.
சில மாதங்கள் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பிறகு, செயற்கை கால் பொருத்திக் கொண்ட றமணன் , 1999 ம் ஆண்டு ராகவன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றபோது மீண்டும் களமுனைக்கு திரும்பினார். ராகவன் அவர்களின் கட்டளை மையத்தில் கடமையேற்ற றமணன் தொலைத்தொடர்பு, பாதுகாப்பு முதலான கடமைகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டார். முதுநிலை அணித்தலைவர் சாரங்கனை லீடராகக் கொண்டு ராகவன் உருவாக்கிய விசேட கொமாண்டோ அணியில் றமணன் ஒரு செக்சன் கொமாண்டராக நியமிக்கப்பட்டார். ராகவனின் அடியொற்றி முரசுமோட்டை , ஊரியான் , பரந்தன், கிளிநொச்சி, உருத்திரபுரம், சுட்டத்தீவு , அம்பகாமம், ஒட்டுசுட்டான் என அனைத்து பகுதிகளிலும் ஓய்வின்றி நடந்து பல்வேறு கடமைகளில் செயற்பட்டார்.
படையணியில் சிறப்பு மிக்க மோட்டார் அணி லீடர்களான தென்னரசன் , செங்கோலன் , நாகதேவன் , முதலானோருடன் றமணன் இணைந்து மோட்டார் பீரங்கி பயிற்சிகள் பெற்று சிறந்த மோட்டார் சூட்டாளனாகத் தேறினான் . படையணியின் கனரக ஆயுதங்கள் பொறுப்பாளர் மதன் அவர்கள் றமணனை ஊக்கப்படுத்தி வழிநடத்தினார்.
ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் றமணன் அம்பகாமம் பகுதியில் இராசநாயகம், வீரமணியுடன் நின்று கடுஞ்சமர் புரிந்தார். பரந்தன் மீட்புச் சமரில் றமணனும் பிரபல்யனும் 60 மி. மீ மோட்டார்களுடன் தீவிரமாக களமாடினர் . இவர்கள் இருவரும் பரந்தன் இராசாயனத் தொழிற்சாலையிலிருந்த இராணுவ முகாம் மீது தொடுத்த செறிவான எறிகணைத் தாக்குதல்களால் அம் முகாம் தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக அழிந்தது. இதனால் பரந்தன் பகுதி முழுவதும் எம்மால் மீட்கப்பட்டது. இதன் பின்னர் படையணி மன்னார் பகுதியில் பாதுகாப்பு கடமையிலிருந்த போது றமணன் கோபித்துடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் படையணி முகாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த போது, றமணன் வீரமணியுடனும் ஐயனுடனும் இணைந்து, எதிரியின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் சினைப்பர் தாக்குதல்களுக்கு நடுவில் பாதுகாப்பு கடமைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் திறமுடன் செயற்பட்டார்.
2000 ம் ஆண்டு ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறக்க சமரின் போது றமணன் வீரமணியுடன் இயக்கச்சி பகுதியில் நின்று, தடையுடைப்பு அணியில் தீவிரமாக செயற்பட்டார். வீரமணி மாலதி. படையணி யைக் கொண்டு இயக்கச்சி சந்தியில் தடைகளைத் தகர்த்தெறிந்து மின்னல் வேகத்தில் பளையைக் கடந்து இத்தாவிலில் இணைந்த வரலாற்று சமரில் றமணனுடைய பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. இதன்பிறகு படையணி இரணைமடு போர்ப்பயிற்சி கல்லூரியில் இருந்தபோது துணைத் தளபதி கோபித்துடன் நின்று பல்வேறு கடமைகளில் ஈடுபட்டார். பின்னர் நாகர்கோவிலை கைப்பற்றிய சமரில் றமணன் கோபித்துடன் நின்று திறமுடன் களமாடி னார்.
2001 சனவரியில் நாகர்கோவில் எழுதுமட்டுவாள் பகுதியில் சிறப்புத் தளபதி வீரமணியுடன் நின்ற எமது அணியினர் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய முற்றுகைக்குள் அகப்பட்ட போது, றமணன் அவருடனிருந்து , தீவிரமாக களமாடி னார். பின்னர் படையணி முகமாலை களமுனையில் பாதுகாப்பு கடமையிலிருந்த போது றமணன் துணைத் தளபதி கோபித்துடன் நின்று, 60 மி. மீ மோட்டார் அணிகளுக்கு லீடராக செயற்பட்டார். கோபித்தின் கட்டளை மையத்தில் மதுரன் , பாவலன் , அகமன்னன் , முருகேசன், சாந்தீபன் முதலானோருடன் இணைந்து பாதுகாப்பு கடமைகளிலும் முன்னரண் வேலைகளிலும் சிறப்பாக செயற்பட்டார். எதிரி பளையைக் கைப்பற்ற மேற்கொண்ட ” தீச்சுவாலை ” நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர்களில் றமணன் 60 மி. மீ மோட்டார் சூட்டாளனாகத் திறமுடன் போரிட்டார் . கோபித்தின் கட்டளை மையத்தை சுற்றி நடைபெற்ற கடும் சமரில் றமணன் மதுரன் ,பாவலன் ,வெற்றிநிலவன் முதலானோருடன் இணைந்து தீவிரமாக களமாடினார் . மேலும் நாகதேவன், வைத்தி முதலானோருடன் 81. மி. மீ மோட்டார் அணியில் நின்று சூட்டாளனாகத் திறமுடன் செயற்பட்டார் . இச் சமருக்கு பின்னர் படையணியின் ஒரு பகுதி சிறப்புப் பயிற்சிக்காக கல்லூரிக்கு சென்றபோது றமணன் அங்கு கடமையாற்றினார் .
2002 ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் இருந்த போது றமணன் சிறப்பு அரசியல் வேலைத் திட்டங்களுக்காக யாழ்ப்பாணத்திலும் பின்னர் மன்னார் வவுனியா நகரங்களிலும் செயற்பட்டார்.
குழப்படிகளிலும் பகிடிக் கதைகளிலும் வல்லவராக இருந்த றமணன் சண்டை செய்வதில் மட்டுமின்றி விளையாட்டிலும் தணியாத ஆர்வம் கொண்டவராக இருந்தார். செயற்கை காலுடன் நடமாடிய போதிலும் வலைப்பந்து , கால்பந்து விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் தொடர்ந்து விளையாடி வந்தார். மேலும் சதுரங்க விளையாட்டிலும் றமணன் திறமுடன் விளையாடினார். போர்ப்பயிற்சி கல்லூரியில் எமது அனைத்து படைப் பிரிவுகளுக்குமிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் றமணன் முதலாவது இடத்தில் வெற்றி பெற்று, தேசியத் தலைவரிடம் பாராட்டையும் அழகிய மாபில் காய்களைக் கொண்ட சதுரங்கப் பலகையையும் பரிசாகப் பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தார். மேலும் தமிழீழ திரைப்படத் துறையினர் தயாரித்த ஒரு குறும்படத்திற்கு களமுனை படப்பிடிப்பு ஆலோசகராக சிறப்புடன் செயற்பட்டு பாராட்டும் பரிசும் பெற்றார். இவருடைய இணைபிரியா தோழன் மேஜர் இராசநாயகம் அவர்களுடைய நினைவைப் போற்றும் வகையில், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தயாரித்த துயிலறைக் காவியம் நிகழ்ச்சியில் இவர்களுடைய தோழன் வைத்தியுடன் இணைந்து ,இராசநாயகத்தின் களச் செயற்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை பதிவு செய்தார்.
போர்க்களத்தில் உறுதியும் விடாமுயற்சியும் கொண்ட றமணன் இளகிய மனமும் போராளிகள் டையே சகோரத்துவ உணர்வும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கினார். சமையற்கலையிலும் றமணன் தேர்ந்த வராக இருந்தார். தனது சக போராளிகளுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து தருவதில் ஆர்வத்துடன் செயற்படுவார் . றமணன் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படும். இவருடைய குழப்படிகளுக்காக இடையிடையே சிறு தண்டணைகளையும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்வார்.
2004 ம் ஆண்டு எமது தாயகத்தை சுனாமிப் பேரலைகள் தாக்கிய போது, போர்ப்பயிற்சி கல்லூரியில் கடமைகளில் இருந்த றமணன் உடனடியாக சக போராளிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். இந் நாட்களில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, உடுத்துறை , தாழையடி ஆகிய பகுதிகளில் றமணன் ஓய்வொழிச்சலின்றி செயற்பட்டார்.
போர்ப்பயிற்சி கல்லூரியில் றமணன் கிளைமோரை இயக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்று தேர்ந்த நிபுணனாக விளங்கியதோடு , மாஸ்டரின் வழிநடத்தலில் புதிய போராளிகளுக்கு அப் பயிற்சிகளை வழங்கி அவர்களை சிறந்த செயற்பட்டாளர்களாக உருவாக்கினார். மேலும் அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சியையும் மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பாளர் பயிற்சியையும் திறமுடன் நிறைவு செய்தார்.
நாகர்கோவில் களமுனையில் வீரமணி பகுதிப் பொறுப்பாளராக இருந்த போது, றமணன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு கடமைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் திறமுடன் செயற்பட்டார். 2006 ம் ஆண்டு மே மாதத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த வெடிவிபத்தில் வீரமணி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். வீரமணியை இழந்த தாக்கத்திலிருந்து விரைவில் மீண்ட றமணன் மன்னார் களமுனையில் தீவிர செயற்பாடுகளில் இறங்கினார்.
மன்னார் மாவட்டத்தில் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள் நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தல்களில் புலனாய்வுத் துறை மற்றும் அரசியறதுறை போராளிகளுடன் இணைந்து ஓய்வின்றி செயற்பட்டார். உள் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட தேசியத் தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொண்ட றமணன் எதிரியின் முன்னரண் வரிசையை ஊடறுத்து தான் தெரிவு செய்த பாதையூடாக தனது அணியுடன் மன்னார் நகருக்குள் சென்றார். அங்கு இராணுவத்தினரின் வாகனங்கள் மீது பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினமேலும் பல மன்னாரைக் கைப்பற்றுவதற்கான வேவு நடவடிக்கைகளிலும் றமணன் தனது அணியை சிறப்புடன் ஈடுபடுத்தினார்.
இந்நிலையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேஜர் கிண்ணி அவர்களின் நினைவு நாளான யூலை 10 அன்று எதிரியின் மீது ஒரு அதிரடித் தாக்குதலை நடத்த வேண்டுமென தீர்மானித்த றமணன் எதிரியின் சிறு முகாம் ஒன்றை தெரிவு செய்து தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தார். அதன்படி 2006 ம் ஆண்டு யூலை மாதம் 10 ம் நாள் அதிகாலையில் றமணனும் புலனாய்வுத் துறை போராளி ஒருவரும் எதிரியின் முகாம் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்தனர் . சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந் நேரடிச் சமரில் றமணனும் அவருடைய சக தோழனும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர் .
அப்பொழுது படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த கோபித் அவர்களும் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லக்ஸ்மன் அவர்களும் எடுத்த பெருமுயற்சியால் இருவருடைய வித்துடல்களும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக எமது பகுதிக்கு எடுத்து வரப்பட்டு கிளிநொச்சி துயிலுமில்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. துயிலுமில்லத்தில் கூடிய பொதுமக்கள் மற்றும் போராளிகளின் பெருங்கூட்டம் றமணனுடைய அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளையும் மக்கள் பற்றையும் எடுத்துக் காட்டுவனவாக விளங்கின.
மிக இளம் வயதிலேயே தமிழரின் தாயக விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உணர்வோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட றமணன் மிகுந்த அர்ப்பணிப்போடும் விடாமுயற்சியோடும் தொடர்ந்து களமாடி , விடுதலைப் போரை வீச்சாக்கிய பல்லாயிரம் மாவீரர்களுடன் இணைந்து கொண்டார் . படையணியின் தாக்குதல் தளபதிகளுள் ஒருவராக விளங்கிய லெப். கேணல். றமணன் அவர்களின் போராட்ட வாழ்க்கை இளம் போராளிகளுக்கு ஊக்கமூட்டுவதாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். றமணனின் காலடிகள் பதிந்த படைத்துறைப் பள்ளியும் புலிகளின் பாசறைகளும் களமாடி வாகை சூடிய களங்களும் அவருடைய உணர்வை எடுத்தியம்பிக் கொண்டேயிருக்கும் .