யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் தர்மசேனவின் முறைப்பாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் இந்துனில் என்பவர் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் அருணி ஆட்டிகல முன்பாக சாவகச்சேரி வெடிபொருட்கள் தொடர்பான மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில் சாவகச்சேரியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அங்கி, காந்தக் குண்டுகள், அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள், சிலிக்கன் மணல் மற்றும் வேறு பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பொருட்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற விரும்புவதாகவும் பொலிசாரின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையார் வீதி, வெள்ளங்குளம், மரவன்குளம் மத்தி, சாவகச்சேரி எனும் முகவரியைச் சேர்ந்த ஜுலியன் என்றழைக்கப்படும் ரமேஷ் என்பவர் தற்போது சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இவர் இன்னும் கொழும்புக்கு அழைத்து வரப்படவில்லை என்றும் பொலிசார் நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தியிருந்தனர். இதனையடுத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.