தாய்லாந்து நாட்டிற்கு எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு 10 ஆண்டுகள் வரை சிறை விதிக்க வாய்ப்புள்ளதாக பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து நாட்டில் e-cigarette எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக தடை விதித்தது.
இத்தடையை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது கடுமையான சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகமும் அந்நாட்டில் இயங்கி வரும் சுற்றுலா ஏஜென்சி நிறுவனங்களும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை கொண்டு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா ஏஜென்ஸியை சேர்ந்த பேட் வாட்டர்டன் என்பவர் பேசியபோது, ‘எனது உறவினர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது எலெக்ட்ரானிக் சிகரெட்டை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டார்.
125 பவுண்ட் அபராதமாக செலுத்திய பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுப்பட்ட சிலர் தாய்லாந்து நாட்டில் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியார்கள் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளை கொண்டு செல்ல வேண்டாம் என பேட் வாட்டர்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.