மத்திய மாநில அரசு மருத்துவமனையில் காணாமல்போன 70 வயது பெண்ணின் உடலை தெரு நாய் கடித்துக் குதறிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது கடந்த 10 மாதங்களில் அம்மாநிலத்தில் நடக்கும் 5 வது கோர சம்பவமாகும். ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் கடந்த சில நாட்களாக வீசிய துர்நாற்றத்தால் மருத்துவர்களும், நோயாளிகளும் கடும் அவதியுற்றுள்ளனர்.
துர்நாற்றம் வீசிய திசையில் மருத்துவமனை துப்புரவு ஊழியர்கள் தற்செயலாக பார்த்தபோது, 70 வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது.
பெண்ணின் சடலத்தில் சில பாகங்கள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் மற்றவற்றை நாய் கடித்து குதறியதாகவும் கோட்வாலி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோயாளி உயிருடன் இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை என்றும், மருத்துவமனையில் இருந்து 5 முதல் 7அடி வரை பெண்ணின் உடல் இழுத்து வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், கடந்த மார்ச் 22ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து பிஸ்மில்லா பாய் என்ற பெண் காணாமல் போனது, பின்னர் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட பிறகு தான் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.