சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி! இங்கிலாந்துக்கு மரண அடி கொடுத்து..டி20 கோப்பையையையும் தட்டித் தூக்கிய வெஸ்ட் இண்டீஸ்

142

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுங்கள் அணி தொடரைக் கைப்பற்றியது.

மோட்டி அபார பந்துவீச்சு
ட்ரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் (11), வில் ஜேக்ஸ் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடி காட்டிய பிலிப் சால்ட் (Philip Salt) 22 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோட்டி ஓவரில் போல்டு ஆனார்.

பின்னர் வந்த ஹரி புரூக் 7 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மொயீன் அலி 23 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். இரண்டு சிக்ஸர் விளாசிய லிவிங்ஸ்டன் 28 (29) ஓட்டங்களில் வெளியேற, இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

இதனால் அந்த அணி 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் மோட்டி 3 விக்கெட்டுகளும், ரசல், அக்கேல் ஹூசேன் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

சார்லஸ் அதிரடி
அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகளில் களமிறங்கிய பிரண்டன் கிங் 3 ரன்னில் அவுட் ஆகி சொதப்பினார். அடுத்து வந்த பூரனும் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

சார்லஸ் அதிரடியாக 27 ஓட்டங்கள் எடுக்க, அடில் ரஷீத் அவரை வெளியேற்றினார். எனினும் ரூதர்போர்டு மற்றும் ஷாய் ஹோப் இருவரும் வெற்றியை நோக்கி அணியை கொண்டு சென்றனர்.

ரூதர்போர்டு 24 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ரஷீத் ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷாய் ஹோப் மிரட்டல்
மேற்கிந்திய தீவுகள் வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில் ரோவ்மான் பாவெல் (8), ரசல் (3) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதம் இருக்கும்போது சிக்ஸர் அடித்து வெற்றியை நிலைநாட்டினார். அவர் 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரையும் மேற்கிந்திய தீவுகள் வென்றதால் இங்கிலாந்து அணி ஒயிட் வாஷ் ஆனது.

 

SHARE