சிக்ஸர் மழை பொழிந்த நியூசிலாந்து வீரர்! வீணான பாபர் அசாமின் அரைசதம்

122

 

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாணவேடிக்கை காட்டிய ஃபின் ஆலன்
ஹாமில்டனின் Seddon Park மைதானத்தில் நடந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி நியூசிலாந்து களமிறங்கியது. ஆமீர் ஜமால் ஓவரில் கான்வே 20 (15) ஓட்டங்களில் அவுட் ஆனார். ஆனால் தொடக்க வீரர் ஃபின் ஆலன் சரவெடியாய் வெடித்தார். சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிய அவர், 4வது அரைசதத்தை கடந்தார்.

ஃபின் ஆலன் 41 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசிய நிலையில் உஸமா மிர் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

ஹாரிஸ் ராஃப் அபாரம்
பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், காயம் காரணமாக Retired hurt முறையில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், சான்ட்னர் மட்டும் அதிரடியாக 25 (13) ஓட்டங்கள் விளாசினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்தது. ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஃபஹர் ஜமான் மிரட்டல்
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 10 ஓட்டங்களுக்கு தொடக்க விக்கெட்டுகளை இழந்தது. எனினும் ஃபஹர் ஜமான் வாணவேடிக்கை காட்டினார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த பாபர் அசாமும் அதிரடியில் மிரட்டினார். இந்த கூட்டணி 87 ஓட்டங்கள் குவித்தது. 25 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசி ஜமான் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.

பாபர் அசாம் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர். சோதி, மில்னே பந்துவீச்சில் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சரிந்தன.

ஆடம் மில்னே துல்லியமான பந்துவீச்சு
வெற்றிக்காக போராடிய கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி, 13 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 22 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி விக்கெட்டாக அப்பாஸ் அஃப்ரிடி அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 173 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளும், டிம் சௌதீ, சோதி மற்றும் பென் சியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

SHARE