சிங்கப்பூரில்  தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

247

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக தமிழ் இளைஞர் ஒருவருக்கு இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவைச் சேர்ந்த 29 வயதாகிய பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்ற இளைஞருக்கு இன்று காலை 6 மணியளவில், சாங்கி சிறையில் இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோலாலம்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரபாகரனின் வழக்கு விசாரணை நடைபெறவிருந்த நிலையில் பிரபாகரனின் மரண தண்டனையை ஒத்திவைக்க அவரது சட்டத்தரணி கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று நிராகரித்ததுடன், பிரபாகரனின் தண்டனையை அவ்வாறு நிறுத்த முயல்வது முறையற்றது என்றும் கண்டித்திருந்தனர்.

தொடர்ந்து 29 வயதாகிய பிரபாகரன் ஸ்ரீவிஜயனுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2012ம் ஆண்டு சிங்கப்பூர் குடிநுழைவு மையத்தில், பிரபாகரன் ஸ்ரீவிஜயன் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் டியோமார்ஃபின் (diamorphine ) என்ற போதைப் பொருளை சிங்கப்பூர் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்தே குறித்த காரை பெற்றதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் பிரபாகரன் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி மருந்துகளை தவறாக பயன்படுத்தும் சட்டம், பிரிவு 7ன் கீழ் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 2015ம் ஆண்டு பிரபாகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.

பிரபாகரன் விடுதலையாக வேண்டுமானால் இரு நாட்டு அரச தந்திரி உறவுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துலக நீதிமன்றத்திற்கு இவ்வழக்கினை கொண்டு செல்வதற்கு முன்னர் மலேசியா இதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE