அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இந்தத் தொடரின் காலிறுதிப்போட்டியில் செவஸ்டோவா நடப்பு சாம்பியன் ஸ்வோவன் ஸ்டீபன்சை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதனால் செரீனாவுக்கு இவர் கடுமையான சவால் அளிப்பார் என டென்னிஸ் வட்டாரங்களில் பேசப்பட்டது. கடந்த ஆண்டு செரீனாவுக்கு குழந்தை பிறந்து. மகப்பேறு முடிந்த சில மாதங்களிலே செரீனா களத்துக்கு திரும்பிவிட்டார். ஆனால், அவரது ஆட்டங்களில் முன்போல் அனல் பறக்கவில்லை. ஒவ்வொரு வெற்றிக்கும் கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். அமெரிக்க ஓபனில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்க்கு எதிரான போட்டியில் அவரது ராக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் பறந்தன. இது தனது சிறப்பான ஆட்டம் என செரீனாவே போட்டிக்குப் பின்னர் பேட்டியளித்தார்.