சிங்களக் குடியேற்றங்கள் இந்திய – இலங்கை உடன்பாட்டுக்கு முரண் ; சுரேஷ் பிரேமச்சந்திரன்

133

வடக்­கு-­ – கி­ழக்கில் குறிப்­பாக முல்­லைத்­தீவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வரும் சட்­ட­வி­ரோத திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் இந்­திய- – இலங்கை ஒப்­பந்­தத்­துக்கு முர­ணா­னவை என்று ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

ஜே.ஆர்.ஜய­வர்­தன ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் வடக்­கு -­ கி­ழக்கின் நிலத் தொ­டர்பைத் துண்­டிக்கும் வித­மாக சிங்­களக் குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. இதில் முக்­கி­ய­மாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக் குள் உட்­பட்­டி­ருந்த ஏறத்­தாழ நாற்­பத்­தெட்டு கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய வெலி­ஓயா பிர­தே­சத்தை அர­சாங்கம் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து அடாத்­தாகப் பறிப்­ப­தற்­கான சூழ்ச்­சி­களை மேற்­கொண்­டது.

இந்தப் பிர­தே­சத்தில் பல்­வே­று­பட்ட கிரா­மங்­களும் வயல்­நி­லங்­களும் மத்­தி­ய­தர வகுப்­பி­ன­ருக்­கான பண்­ணை­க­ளு­மாக முற்­று­மு­ழு­தாக தமிழ் மக்­களின் வாழ்­வி­ட­மாக அவை இருந்­து­வந்­தன.

யுத்த காலத்தில் இங்­கி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் விரட்­டப்­பட்டு ஏதி­லி­க­ளாக மாற்­றப்­பட்­டது மட்­டு­மல்­லாமல் இப்­பி­ர­தேசம் முழு­மை­யாக இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அப்­போ­தைய நிர்­வாக வச­திக்­காக இப்­பி­ர­தேசம் அனு­ரா­த­புரம் மாவட்­டத்தின் நிர்­வாகக் கட்­டுப்­பாட்­டிற்­குள்ளும் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

பின்னர், இந்த சம­யத்தில் இப்­பி­ர­தேசம் மகா­வலி அதி­கா­ர­ச­பைக்குள் உள்­ளீர்க்­கப்­பட்டு மகா­வலி ‘டு’ வலயம் என்று குறிப்­பி­டப்­பட்­டது. அதே நேரம் இப்­பி­ர­தே­சத்தின் தமிழ்ப் பெய­ரான மண­லாறு என்­பது வெலி­ஓயா என்று சிங்­க­ளத்தில் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. தமி­ழர்­களை விரட்டி ஏதி­லி­யாக்­கி­ய­வர்கள்

சிங்­கள மக்­களைக் குடி­யேற்றத் தொடங்­கி­னார்கள். இதில் பல­நூறு சிங்­கள மக்கள் கிரி­மினல் குற்­றச்­சாட்­டிற்கு உள்­ளாக்­கப்­பட்டு சிறைத் தண்­டனை அனு­ப­வித்­து­வந்த நிலையில் ஊர்­கா­வல்­து­றையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு ஆயுதப் பயிற்­சிகள் அளிக்­கப்­பட்­டதன் பின்னர் அப்­பி­ர­தே­சத்தில் குடி­யேற்­றப்­பட்­ட­வர்கள்.

வடக்­கு-­கி­ழக்கு இணைந்த தமி­ழர்­களின் தாயகம் என்ற தமிழ் மக்­களின் கோரிக்­கையை இல்­லாமல் செய்­வ­தற்­காக வடக்­கு-­கி­ழக்கு நிலத் தொடர்பைத் துண்­டிப்­பதே இவர்­க­ளது முக்­கிய நோக்­க­மாக இருந்­தது. அது­மட்­டு­மன்றி, அனு­ரா­த­பு­ரத்தைத் தலை­மை­யி­ட­மாகக் கொண்ட வட­மத்­திய மாகா­ணத்­திற்கு கட­லு­ட­னான தொடர்­பு­களும் தேவை என இதன் மூலம் நியா­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்தப் பின்­ன­ணியில் இரா­ணுவப் பாது­காப்­பு­ட­னான சிங்­களக் குடி­யேற்­றங்கள் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டது மட்­டு­மன்றி, வாழ்க்­கையில் மகா­வலி நீரே வர­மு­டி­யாத பிர­தே­சத்தை மகா­வலி அபி­வி­ருத்திச் சபைக்கு உள்­ளிட்ட காணிகள் என அடை­யா­ளப்­ப­டுத்­தி­ய­துடன், கடற்­கரை அண்­டிய தமிழ் மக்­களின் கர­வ­லைப்­பா­டு­கள்­கூட இந்த மகா­வலி அபி­வி­ருத்­திச்­ச­பை­யின்கீழ் கொண்­டு­வ­ரக்­கூ­டிய கேவ­ல­மான நிலையும் அரங்­கே­றி­யது.

வடக்­கு-­கி­ழக்கின் நிலத்­தொ­டர்பைத் துண்­டிக்கும் இவர்­களின் வேலைத்­திட்டம் யுத்­த­கா­லத்தில் பின்­தள்­ளப்­பட்­டி­ருந்­தது. ஆனால் யுத்தம் முடிந்­த­தற்குப் பின்னர், தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து பறித்­தெ­டுத்த காணி­களை நிரந்­த­ர­மாக சிங்­கள மக்­க­ளுக்கு வழங்­கி­யது மாத்­தி­ர­மல்­லாமல், அதற்­கான உறு­தி­க­ளையும் முன்­னைநாள் ஜனா­தி­பதி மகிந்­த­ரா­ஜ­பக்ச அவர்கள் சிங்­கள குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு வழங்­கி­வைத்தார்.

இந்த நிலையில் தற்­போது ஆட்­சி­யி­லுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் என்று சொல்­லக்­கூ­டிய மைத்­தி­ரி-­ரணில் கூட்டு அர­சாங்­க­மா­னது இதே நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தும் முன்­னெ­டுத்­து­வ­ரு­வதை நாம் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. நாயாறு, கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய் போன்ற பிர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய 2500க்கும் ஹெக்­டெ­ய­ருக்கும் மேற்­பட்ட காணி­களை மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்குக் கொண்­டு­செல்­வதன் மூலம் அங்­குள்ள தமிழ் மக்­களை விரட்­டி­ய­டித்து, சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை இவ்­வ­ர­சாங்­கமும் மேற்­கொண்டு வரு­கி­றது.

சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்­டி­ருக்கும் சிங்­கள மீன­வர்­களை அங்கு தொடர்ச்­சி­யாக வைத்­தி­ருப்­ப­தற்­கான அரச உத­வி­களும் இரா­ணுவ ஆத­ர­வு­களும் தொடர்ந்தும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. இதேபோல் அம்­மக்­க­ளுக்­கான குடி­யி­ருப்புக் காணி­களை வழங்­கு­வ­தற்­கான முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. புதி­தாக பௌத்த ஆல­யங்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பதி­னாறு கிராம சேவகர் பிரி­வுடன் ஒரு புதிய பிர­தேச செய­லாளர் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது தற்­போ­தைய முல்­லைத்­தீவு மாவட்ட குடி­சனப் பரம்­ப­லிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி;யுள்­ளது. இத்­த­கைய செயற்­பா­டுகள் இவ்­வ­ள­வு­தூரம் நடை­பெற்­றும்­கூட, சட்­ட­வி­ரோ­த­மான இந்த வேலைத்­திட்­டங்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் எத்­த­கைய முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளனர் என்ற வினா அனை­வ­ரி­டமும் எழுந்­துள்­ளது.

மக்கள் பிர­தி­நி­திகள் என்ற அடிப்­ப­டையில் தமிழ் மக்­களின் இருப்­பையே கேள்­விக்­குட்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் இத்­த­கைய சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாடா­ளு­மன்­றத்­தி­னூ­டா­கவும், சர்­வ­தேச சமூ­கத்­தி­னூ­டா­கவும் மேற்­கொள்ள வேண்­டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

அதுமட்டுமன்றி, தமிழ் மக்களின் இருப்பைக் காப்பாற்றுவதற்காக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அது ஒரு மாகாணம் என்ற அந்தஸ்தையும் எட்டியது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அறிமுக உரையிலேயே ‘வடக்கு-கிழக்கு என்பது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடம்’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இன்று இத்தகைய சட்டவிரோத சிங்களக் குடியேற்றத்தினூடாக வடக்கு-கிழக்கு நிலத்தொடர்பைத் துண்டிக்கும் விடயம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கும் விரோதமான ஒரு செயற்பாடாகும். ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளை இந்திய அரசு கண்டிப்பது மட்டுமன்றி, அதனைத் தடுத்து நிறுத்தவும் முன்வரவேண்டும்.

SHARE