சிங்கள கட்சிகள் பெரும் தவறிழைத்துள்ளன?

213

 

சிங்களக் கட்சிகள் பெரிய தவறிழைத்து விட்டன . அதுவே கடந்த 30ஆண்டு கால யுத்தத்திற்கு வழியமைத்தது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பெண்கள் விடுதியை நேற்று (19) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும், அப்போதுதான் வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்கமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

உயர்கல்வி அமைச்சின் சுமார் 300மில்லியன் ரூபா செலவில் இந்த பெண்கள் விடுதி அமைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 160 அறைகளைக்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பெண்கள் விடுதியில் சுமார் 320 மாணவிகள் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கான மாணவிகள் மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுவந்த நிலையில் நீண்டகால விடுதிப்பிரச்சினை இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் ரி.ஜெயசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பல்கலைக்கழக அதிகாரிகள்,ஊழியர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

SHARE