தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றது.
இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பாக சுமந்திரன் விளக்கம் அளித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுமந்திரன் சமஷ்டி முறை தொடர்பாக இப்படிக் கூறுகின்றார்.
“நாட்டின் நிர்வாகத்தில் அனைத்து இன மக்களும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு சமஷ்டி முறைமை ஆட்சி என்றால் நாடு ஒன்றுபடும் அதேவேளை, ஒற்றை ஆட்சி முறைமை என்றால் நாடு பிளவுபடும். ஓரினத்தை மற்றோர் இனம் அடிமைப்படுத்த முனையும்போதுதான் குரோதமும், பிரிவினைவாதமும் ஏற்படும். இதனை சிங்கள் மக்கள் தமது தலைவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.
சமஷ்டி முறை அதிகாரப்பரவலாக்கம் தமிழ் மக்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு புதிய சொல் அல்ல.1926ஆம் ஆண்டில் சிங்கள மக்களால் தேசியத் தலைவராக இன்னும் மதிக்கப்படும் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவால்தான் முன்மொழியப்பட்டது.
தன்னுடைய முன்மொழிவை நியாயப்படுத்தி ‘Morning Leader’ என்ற பத்திரிகையில் ஆக்கபூர்வமான ஐந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, சுவிஸ் நாட்டில் இருப்பது போன்று ஒரு சமஷ்டி முறையே இலங்கைக்கும் பொருத்தமானது என்றும் அடித்துக் கூறியுள்ளார்.
1931ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கண்டிய சிங்களத் தலைவர்களும் சமஷ்டி முறையே ஏற்றது என சாட்சியமளித்துப் பதிலளித்துப் பதிவுசெய்துள்ளனர்.
எனவே, நாட்டின் நலனில் அக்கறையுடன் செயற்பட்ட தேசிய தலைவர்களும் சிங்கள மக்களும் சமஷ்டி ஆட்சி முறைமையை எதிர்க்கவில்லை. சில சுயநலவாத அரசியல் பினாமிகளே நாடு பிளவுபட்டுவிடும் என்ற பிரேமையை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டுகின்றனர்.
நாட்டின் நலனில் அக்கறைகொண்ட போதி மாதவனின் தர்ம போதனைகளைப் பின்பற்றும் சிங்கள மக்கள், தமது தலைவர்களும் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டுமென அழுத்தம் கொடுக்கவேண்டும் என சிங்கள சகோதரர்களிடம் கோரிக்கை ஒன்றை அன்பாக முன்வைக்கின்றேன்” என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
புதிய அரசமைப்பு பொறிமுறை விவாதம் பின்போடப்பட்டது ஏன்?
புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அடித்தளமாக உறுதியான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் மூன்றாவது தடவையாகவும் பின்போடப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்று ஒரு வினா எழுப்பப்பட்டது.
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 9ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு 12ஆம் திகதி விவாதிக்கப்பட்டு இன்று (நேற்று) 26ஆம் திகதி விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இன்று (நேற்று)
விவாதிக்கப்படமாட்டாது. இவ்விடயம் பெப்ரவரி மாத அமர்வின்போது விவாதிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதியும் பிரதமரும் இவ்விடயம் தொடர்பாக மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றனர். அவசியமான பொறிமுறையை அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இணைந்து உருவாக்க வேண்டும். சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் இவ்விரு கட்சிகளும் இணைந்தே பிரேரணையை முன்வைத்துள்ளன. இரு பிரதான கட்சிகள் முன்வைத்த பிரேரணையை மழுங்கடிக்கச் செய்ய சில பிற்போக்குவாதிகள் முயல்கின்றனர். அதனை மலினப்படுத்த இடமளிக்கக்கூடாது. அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவுடன் செயற்படுத்தவே அரசு விரும்புகின்றது. கடந்த காலங்களில் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை உதாசீனப்படுத்தி பெரும்பான்மை என்ற உணர்வுடன் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்துள்ளன.
ஆனால், இலங்கையின் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயமாக சிறுபான்மை இனப் பிரதிநிதிகளினதும், சிறுபான்மை இன மக்களின் பங்களிப்புடனும் ஒரு புதிய அரசமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதனால் நாம் இவ்விடயத்தில் ஆதரவை வழங்குகின்றோம். அரசு முன்வைத்த காலை பின்வைக்கக்கூடாது என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது” – என்று சுமந்திரன் விளக்கமளித்தார்.
பெரும்பான்மை அதிகாரத்தால் ஏற்பட்ட விபரீதங்கள்
“நாடு சுதந்திரம் அடைந்தபோது உருவாக்கப்பட்ட பெரும்பான்மை தன்னாதிக்க முறைமையால் சுதந்திரம் அடைந்து ஒரு வருடத்திலேயே ஒரு சமூகத்தின் (இந்திய வம்சாவளி) பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக அறுபதுகள் முதல் 1978 வரை பல்வேறு முறைமைகள் உருவாக்கப்பட்டன. அவ்வப்போது தொடர்ச்சியாக எம்மால் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், பெரும்பான்மை தன்னாதிக்க உரிமையால் எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளும் உயிரிழப்புகளும் உலகே அறிந்தது. ஆனால், இம்முறை அரசியல் அமைப்பை உருவாக்குவதில் நாமும் பங்காளிகளாக உள்வாங்கப்பட்டுள்ளோம். நமது ஆலோசனைகளும் பிரேரணைகளும் உள்வாங்கியே அரசமைப்பு உருவாக்கப்படவுள்ளது. அதற்கு ஆதரவு வழங்கவேண்டிய கடப்பாடும் எமக்கு உண்டு” என்றும் சுமந்திரன் கூறினார்.
ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கூற்றுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
நீங்கள் அரசுக்கு ஆதரவாக செயற்படுகின்றீர்கள். ஆனால், ஜனாதிபதி பி.பி.சிக்கு அளித்த பேட்டியிலும், பிரதமர் சுவிஸிலும் கூறியவை மாறுபட்டவையாகவே அமைந்துள்ளனவே என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
“நாம் அரசுக்கு ஆதரவாக செயற்படவில்லை. அரசு மேற்கொள்ளும் நல்ல விடயங்களுக்கு ஆதரவளித்து வருகின்றோம். செயல் சிறிது தாமதமானாலும் சன்னம் சன்னமாக நடைபெறுகின்றன. அதனை துரிதப்படுத்தவேண்டும் என்ற அழுத்தத்தை நாம் கொடுத்துவருகின்றோம்.
அதேவேளை, அரசின் குறைபாடுகளை மூடி மறைக்கவேண்டிய அவசியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கூற்றுகளை நாம் பகிரங்கமாகக் கண்டித்துள்ளோம். எமது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளோம்” என்றார் சுமந்திரன்.
மக்கள் வழங்கிய ஆணை
எம் மக்கள் எம்முடனேயே இருக்கின்றனர். கடந்த தேர்தலின்போது மக்கள் எமக்கு ஆணையிட்டுள்ளனர்.
1. நிரந்தரமான அரசியல் தீர்வு.
2. மக்களின் உடனடித் தேவை.
ஏனைய இன மக்களைப்போன்று எம் இனத்தவர்களும் சம பங்குடன் நிர்வாகத்தில் நேரடி பங்குகொள்ளும் சமஷ்டி ஆட்சி முறை, அடுத்து வடக்கு, கிழக்கு இணைப்பு.
இதன் மூலம் நாம் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உச்சமட்ட அதிகாரத்துடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறையைத்தான் கேட்கிறோம். இதனை நாம் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளோம். அதற்கு மக்கள் சர்வஜன வாக்களிப்பு போன்று ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளனர். இதனையே நாம் புதிய அரசமைப்பிலும பிரேரணையாக முன்வைக்கவுள்ளோம்” – என்றும் சுமந்திரன்
குறிப்பிட்டார்.
பேரவையின் ஆலோசனைகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே தமிழ்ப் பேரவை உருவாக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்றுப் பரிசீலனை செய்யப்படும் என்று கூறுவது சரியா?
“தமிழ்ப் பேரவை மட்டுமல்ல, வேறு எந்த அமைப்புகளோ, பொதுமக்களோ எம்மிடம் சமர்ப்பிக்கும் ஆலோசனைகளை ஏற்றுப் பரிசீலிப்போம். மக்களின் அங்கீகாரம் கிடைத்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படும். மக்களால் நிராகரிக்கப்பட்டவைகளை எம்மால் ஏற்கமுடியாது. இது ஒன்றும் பெரிய விடயமல்ல” – என்று பதிலளித்தார் சுமந்திரன்.