சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமான ஒருவர் ரம்யா.

252

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமான ஒருவர் ரம்யா. கல்லூரி படிக்கும்போதே மாடலிங், தொகுப்பாளர் தன்னுடைய ஊடகப் பயணத்தை தொடர்ந்தவர். கடந்த பத்து வருடங்களாக விஜய் டி.வியின் முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது ரேடியோ ஜாக்கியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். கூடவே, கடந்த ஒரு மாதமாக எப்படி தன்னை ஃபிட்டாக வைத்திருப்பது என தானே வீடியோவில் பேசி யூ டியூபில் பதிவு செய்து வருகிறார். இதை பல சினிமா பிரபலங்களும் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள். அவரிடம் ஒரு பேட்டி,

என்ன திடீர்னு ஆர்.ஜே அவதாரம்?

நான் டி.விக்கு வருவதற்கு முன்னாடியே ரேடியோ வாய்ப்பு வந்தது. எனக்கு விஜய் டி.வி யில வாய்ப்புக் கிடைச்சதும் அதை அப்படியே தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப வருஷம் டி.வியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியா இருந்ததாலோ என்னவோ, VJ வை விட RJ வேலை சவாலான வேலையாக நினைக்கிறேன். அதுக்குக் காரணம் டிவி தொகுப்பாளினியாக இருக்கும் போது எதாவது பிழையாகப் பேசிட்டாக்கூட எடிட்டிங்ல அதை கட் பண்ணிடுவாங்க. ஆனா, ரேடியோவைப் பொருத்தவரை அப்படி கட் செய்ய முடியாது. லைவ் ஷோ என்பதால நம்மளோட வேலையை நாமே தான் பார்க்கணும். நம்மதான் அந்த நிகழ்ச்சிக்கான செய்திகள் முதல் பேசுவது, டெக்னிக்கில் விஷயங்களை கையாள்வது வரை எல்லாத்தையும் செய்யணும். அதனாலதான் இதை சவாலான வேலை என நினைக்கிறேன்.

முன்ன இருந்த ரம்யாவுக்கும், இப்போ இருக்கிற ரம்யாவுக்குமான வித்தியாசம்?

விஜய் டி.வி புரோகிராம், படங்களுக்கான டீசர் ரிலீஸ்னு இரவு, பகலா ஓடிட்டே இருப்பேன். நைட் லேட்டா தூங்கி, லேட்டா எழுந்திருச்சு இப்படி அன்னிக்கு நாள் முழுக்க சுறுசுறுப்பு இல்லாம சோர்வா இருக்கும். ஆனா, இப்போ அப்படி இல்ல. நைட்டு 10 மணிக்கு சரியாத் தூங்கி காலை 6 மணிக்கு எழுந்துடுவேன். அன்னிக்கு நாள் முழுக்க உற்சாகமா ஓட ஆரம்பிச்சுடுறேன். காலையில எழுந்திருச்ச உடனே பேப்பர் படிக்கிறது, அன்றைய செய்திகளை தெரிஞ்சு அப்டேட் பண்ணிக்கிறது என சுறுசுறுப்பாக இயங்கிட்டு இருக்கேன். நிறைய மாற்றங்கள். நிறைய மன நிம்மதி. நிறையவே வித்திசத்தை உணருகிறேன்.

ஜிம் ட்ரெயினரா மாறிட்டீங்களா..? நிறைய ஃபிட்னஸ் வீடியோக்களை பகிர்கிறீர்களே?

கடந்த ஐந்து வருடமா உடற்பயிற்சி செய்துட்டுத் தான் இருக்கேன். ஆரம்பத்துல எல்லாப் பெண்களைப் போல நானும், அதிக வெயிட் தூக்கினா பிற்காலத்துல பிரச்னை வரும் இப்படி நினைச்சு நிறைய உடற்பயிற்சிகளை தவிர்த்துட்டு வந்திருக்கேன். நார்மலாக நம்மால் செய்யக்கூடிய விஷயம் எதுவோ அதை மட்டும் ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்.

இப்போ சமீபத்துலதான் எனக்கு ஒரு ஜிம் ட்ரெயினர் கிடைச்சாங்க. நம்மளோட உடல் எடையை வைத்தே பேலன்ஸ்டு உடற்பயிற்சிகள் எப்படி செய்வது என தெரிந்து கொண்டேன். அதை ஃபாலோ பண்ணி என்னோட உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வச்சுட்டேன். இதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாம் என்கிற முயற்சி தான் கடந்த ஒரு மாத காலமாக யூ டியூபில் நானே உடற்பயிற்சி செய்து வீடியோக்களை பதிவு செய்து செய்திருக்கிறேன்.

வீட்ல டைம் கிடைக்கல, வொர்க் அவுட் பண்ண இடம் இல்ல… என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ கண்டிப்பாக உதவும். வாரா வாரம் வியாழக்கிழமை என்னோட வீடியோக்களை ஷேர் செய்துட்டு இருக்கேன். கூடவே இதில், கேர்ஃபுல் ஈட்டிங் பத்தியும் சொல்லிக் கொடுக்கிறேன். நான் ஜிம் ட்ரெயினர் இல்லை என்பதால உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிரச்னை எதாவது இருப்பின் மருத்துவ ஆலோசனையோடு உடற்பயிற்சி செய்யுங்கள் என அறிவிப்பில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.

உடற்பயிற்சி வீடியோவுக்கான வரவேற்பு எப்படி இருக்கு?

ரொம்ப நாள் கழிச்சு ஒரு நிகழ்ச்சிக்கு போனப்போ, ‘ஜெயம்’ ரவி சார் என்னைப் பார்த்ததும், ‘ஃபிட்னஸ் மேடம் கலக்கிறீங்க. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு’ என பாராட்டினார். அதற்குப் பிறகு, ஸ்டன்ட் மாஸ்டர் செல்வம் சார் ‘முதல் லேடி ஃபைட் மாஸ்டர் நீங்க தான். படங்களில் நீங்க ஃபைட் மாஸ்டரா வந்திடுங்க. என்ன ஓ.கே தானே?’ என கேட்டார். ‘வரேன் மாஸ்டர்’னு சொல்லியிருக்கேன். தொகுப்பாளினி ரம்யா என்கிற பெயர் மாறி ரம்யானா ஃபிடன்ஸ் என்கிற அளவுக்கு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் நிறைய செய்வதற்கான தூண்டுதலா இது இருக்கு.

இந்த வீடியோக்களைப் பார்த்துட்டு சினிமா வாய்ப்புகள் எதும்?

சமீபத்துல நடிச்ச ஓ.கே கண்மணி படத்துக்கு பிறகு எந்த படத்துலயும் கமிட் ஆகல. மணி சார் கூப்பிடும்போது மறுக்கக்கூடாதே என்பதாலும், நடிக்கணும்னு ஆசை இருந்ததாலும் அந்த படத்துல நடிச்சேன். இது மாதிரி வித்தியாசமான ரோல் கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன். பட வாய்ப்புக்காக ஒரு நாளைக்கு இரண்டு போன் காலாவது வந்துட்டே தான் இருக்கு. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாப்பாத்திரம் இருந்தா கண்டிப்பா ரம்யாவ ஸ்கிரீன்ல பார்க்கலாம்.

ரஜினி கூட நீங்க சேர்ந்து எடுத்த ஃபோட்டோவை டுவிட்டர்ல பகிர்ந்திருக்கீங்க? அந்த படத்துக்குப் பின்னாடி எதாவது ஸ்பெஷல்?

அந்த படமே எனக்கு ஸ்பெஷல்தான். நான் ரஜினி சாரோட டை ஹார்ட் ஃபேன். அவரோட படத்தை ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கிற தீவிர ரசிகர்களில் நானும் ஒருத்தி. கபாலி ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கிறதுக்கு நான் பண்ண அட்ராசிட்டி பத்தி சொல்லனும்னா நீங்க அதை தனியா எழுதணும். அந்த அளவுக்கு அவரைப் பிடிக்கும். ஒரு முறை ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு ஒரு வேலையாப் போயிருந்தேன். அப்போ ரஜினி சாரோட ஷூட்டிங் அங்க போயிட்டு இருந்தது. அங்கிருந்த பி.ஆர்.ஓ எனக்கு தெரிஞ்சவர். அவர்கிட்ட ரஜினி சாரை தூரத்துல இருந்து பார்த்துட்டுப் போயிடுறேன். எதாவது வாய்ப்பு கிடைக்குமானு கேட்டேன்.

இருங்கனு உள்ளேப் போனவர், உடனே வந்து, ‘ரஜினி சார் உங்கள கூப்பிடுறார்’ என சொல்லவும், கை, கால் ஓடல. உள்ளே போனதும், ‘எப்டி இருக்கீங்க ரம்யா, உங்க புரோகிராமை பார்த்திருக்கேன். ஆங்கிலம் அழகாப் பேசுறீங்க.. ஐ லைக் யுவர் ஸ்லாங் என பாராட்டவும் எனக்கு வானத்துல மிதக்குற மாதிரி இருந்தது.

உடனே நான், ‘சார் உங்க நேரத்தை வீணடிக்க விரும்பல. உங்க கூட ஒரு ஃபோட்டொ எடுத்துக்கலாமானு கேட்டேன். கண்டிப்பா என சொன்னவர் என் தோளை அணைச்சுட்டு போடோவுக்கு போஸ் கொடுத்தார். எடுத்தப் போடோவைப் பார்த்துட்டு, ‘இங்க லைட் கம்மியா இருக்கு’னு சொல்லி மேக்கப் ரூம் லைட் போட்டு மறுபடியும் போட்டோ எடுக்க சொல்லி எனக்காக நேரத்தை ஒதுக்கினார். இந்த போட்டோவைப் பார்த்துட்டு என்னோட தோழிகள் பல பேர், ‘இனிமே செத்துடுனு சொன்னாக்கூட செத்துவப் போல’னு கிண்டல் செய்தாங்க.

உங்களைப் போல பிரபலங்கள் மீது அவ்வப்போது வதந்திகள் வருகிறதே…? அதை எப்படி எடுத்துக்கிறீங்க?

நான் மீடியாவுக்கு வந்த புதுசுலக் கூட இப்படி இல்ல. ஆனா, இப்ப தவறான செய்திகளை அதிகமா பரப்புறதுல இணையதளம் அதிகம் பயன்படுது. பொதுவாக யாரையாவது குறை சொல்லனும்னா ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி தவறாக வதந்திகளை பரப்பிவிட முடியும். அதே மாதிரி பிரபலங்கள் எதாவது ஒரு ஸ்டேட்டஸ் போட்டா உடனே, ஒவ்வொருத்தரும் கமெண்ட்ஸ் அடிக்க ஆரம்பிச்சுடுறாங்க. அவங்களோட ஒவ்வொரு கமெண்ட்ஸுக்கும் நம்மால் பதில் கொடுத்துட்டு இருக்க முடியாது. இணையதளம் எவ்வளவோ நல்ல விஷயத்துக்கு உதவுது. அப்படி பயன்படுத்தாம ஏன் இப்படி பயன்படுத்துறாங்கனு தெரியல. இன்றைக்கு உயரத்துல இருக்கிற எல்லோருமே கஷ்டப்பட்டு பல தடைகளை தாண்டி வந்தவங்கதான். எல்லாருமே எடுத்த உடனே உயரத்துக்கு வந்துவிடவில்லை என்பதை புரிஞ்சுக்கணும். வேற என்ன சொல்றது.

ஊடகத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு நீங்கள் தரும் அட்வைஸ்?

பொது வெளியில நீங்க வந்தாலே விமர்சனங்கள் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. பாராட்டுக்களை ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, திட்டுக்களையும், எதிர்ப்புகளையும் ஏற்று கொள்ளக்கூடிய மனப்பக்குவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒன்று விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும் அல்லது அதை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்லப் பழக வேண்டும்.

கடைசி கேள்வி.. உங்கள் பர்சனல் லைஃப்…. (கேட்பதற்கு முன்பாகவே தடுக்கிறார்)

நீங்க கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன். பர்சனல் விஷயம் வேண்டாம். அது பர்சனலாகவே இருக்கட்டும்.rajnerajne01

SHARE