சிரந்தி ராஜபக்சவின் நிறுவன வாகனத்தில் தாஜூடீன் கடத்தப்பட்டார்?

110

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்சவின் தொண்டு நிறுவனமான சிரிலியே சவிய அமைப்பிற்கு சொந்தமான வாகனத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கடத்தப்பட்டார் என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் இசுர நெத்திகுமாரவிடம் இதனை தெரிவித்துள்ளனர்.

தாஜூடீன் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்வதற்கு சிரிலியே சவிய அமைப்பின் டிபென்டர் ரக வாகனம் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால், சிரந்தி ராஜபக்சவின் சிரிலியே சவிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட WPKA0642 என்ற இலக்கத்தை உடைய டிபென்டர் ரக வாகனம் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் உளவாளி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொலை இடம்பெற்ற தினத்திலும் அதன் பின்னரும் ஜனாதிபதி செயலகத்திற்கும் அலரி மாளிகைக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாஜூடீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE