சிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்..!

235

சிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். முக்கிய நகரங்களையும் பிடித்தனர்.

அவர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சிரியா அதிபர் படைகளும், அதிபர் ஆதரவு ரஷியா படைகளும், அமெரிக்க கூட்டுப் படைகளும் மும்முனை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை ஒடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள கிரயதாயின் நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் பிடியின் கீழ் கொண்டு வந்து உள்ளனர். இந்த நகரம், சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் நகரத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஆகும்.

இந்த நகரம், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் வந்துவிட்டதை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று உறுதி செய்தது.

இதுபற்றி அந்த அமைப்பு கூறும்போது, “திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி இந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றி விட்டனர்” என்று தெரிவித்தது.

இந்த நகரம் வீழ்ந்து விட்டது பற்றி சிரியா அதிபர் ஆதரவு படைகள் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

SHARE