சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட இந்த ரசாயனத் தாக்குதலில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும் இந்த தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் சிரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.நாவின் அமெரிக்கா தூதர் நிக்கி ஹேலி.
இது குறித்துப் பேசிய அவர், “மீண்டும் ஒரு ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த எச்சரிக்கை சிரியாவுக்கு மட்டும் அல்ல. சிரியாவுக்கு ஆதரவளித்து வரும் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
அப்பாவி பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதை சிரியா அதிபர் அசாத் இனி புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.