சிறிநேசன் எம்.பிக்கு எதிராக கொதித்தெழுந்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

282

சிறிநேசன் எம்.பி. அண்மையில் வெயியிட்டுவரும் கருத்துக்கள் சிறுபிள்ளைத் தனமானக இருக்கிறது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கேள்வி ஞானக்குறைபாட்டினால் ஒருவர் என்னசொல்ல வருகிறார் அதன் பின்னனி என்ன என்று ஆராய்ந்து பார்க்காமல் தான்தோன்றித்தனமான கருத்துக்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கூறி வருவது அரசியல் ஞானமற்ற அவரது வக்கிரத்தனத்தையும் அவருக்குள் இருந்த இனத்துவேசத்தையும் இனங்களை பிரித்தாள நினைக்கும் குரோத எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது என அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதியமைச்சர் புதன் கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் முஸ்லிம் உறவுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி இனவாத விதைகளை அப்பாவி தமிழ் மக்களின் இதயத்தில் தூவி அதன் மீது அரசியல் நடத்த முனைகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் சிறிநேசன் போன்றோரும் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூக்குரல் இட்டு திரிவதை பரிதாபமாகவே நான் பார்க்கிறேன்.

நான் எந்த இடத்திலும் அப்பாவிகளான பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் சகோதரர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறவில்லை. தழிழ் மக்களுக்காக பேசுகிறோம் என்ற தோரணையில் அவர்களுக்காக எதனையும் செய்யாமல் வேறொருவர் அவர்களுக்கு உதவ வரும்போது அதனை தடுப்பதும் அதனை இனவாதமாக பேசி மக்களைகுழப்புவதும் உங்களுக்காக வாலாட்டுகிற அதிகாரிகளைப் பயன்படுத்தி தமிழர்களின் பிரதேசத்து அபிவிருத்தியை தடுப்பதுமானது வைக்கோல் போரில் படுத்த நாய் போன்ற செயலாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் தமிழ் மக்களை நீங்கள் தொடர்ந்தும் ஏமாற்றுகிறீர்கள். அவர்களை பிச்சைக்காரர்களாக வைத்துக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற கருத்துப்படவே நான் பேசினேன். இந்தக்கருத்தில் என்ன தவறு இருக்கிறதது.

அரசாங்கத்தின் பங்காளிகள் நாங்கள். நாங்கள்தான் நல்லாட்சியை கொண்டு வந்தவர்கள். என்று வாய்கிழிய மேடைகள் தோறும் கத்தி கூப்பாடு போடும் நீங்கள் அவர்களின் எழுச்சிக்காக என்ன செய்தீர்கள்? சிறையில் வாடுகின்ற அப்பாவி தமிழ்கைதிகளை உங்களால் மீட்க முடிந்ததா? தீர்க்கப்படாமலே நீறுபூத்த நெருப்பாக இருக்கின்ற தமிழர்களின் காணிப்பிரச்சினை, கல்விப்பிரச்சினை, மீள்குடியேற்றம் என்பவற்றில் நீங்கள் காட்டிய கரிசனை என்ன? உங்களால் முடியாதவற்றை இன்னொரு அரசியல்வாதி செய்கின்ற போது பஞ்சத்துக்கு பாம்பாட்டவந்தவர்களைப்போல படம் எடுத்து ஆடுகிறீர்கள்.

அபிவிருத்தி என்றால் என்ன? அதனை எப்படி செய்ய வேண்டும் என எந்தவிதமான அரசியல் நுட்பமும் அறிவும் அறவே இல்லாமல் காலங்காலமாக மக்களை ஏமாற்றி நடாத்துகின்ற உங்களது அரசியல் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களது இனத் துவேசத்தையும் காழ்ப்புணர்வையும் எதிர்காலத்தில் முதலீடு செய்ய முடியாமல் போகும் நிலை உருவாகும்.

நான் தமிழரசு கட்சியினை முற்றாக விமர்சிக்க வில்லை இனவாதம் பேசித்திரிகின்றதமிழரசு கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரைத்தான் விமர்சித்தேன். எதிர்கட்சி தலைவராக ஒரு சிறுபான்மை இனத்தவர் இருப்பதை வரவேற்றவனும், வாழ்த்துச் சொன்னவனும் முதன்முதலில் நான் தான்,  சம்பந்தன் ஐயா மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள் நாங்கள். ஆனால் அவர் தலைவராக இருக்கின்ற ஒரு கட்சியில் இனத்துவேசத்தை கொட்டி அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிக்கும் உங்களைப் போன்றோர் யோகேஸ்வரன் எம்.பிபோன்றோர் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

அண்மையில் ஒருபத்திரிகையில் சிறிநேசன் எம்.பி யின் அப்பட்டமான குரோதத்தனம்கொண்ட செய்தி ஒன்று வெளியாகி இருந்தது . ‘ அமைச்சர்களை நன்றாக வரவேற்று அபிவிருத்திகளை எமது மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் வாக்களிக்கும் போது மாத்திரம் மிகக் கவனமாக செயற்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும்’

இந்த அவரது அறிக்கையில் உள்ள நயவஞ்சத்தனத்தை தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்துள்ளதோடு தமது வருத்தங்களையும் தெரிவித்தார்கள். இயலாமையின் வெளிப்பாடுகள் தான் இது. கடந்த காலங்களில் தேவநாயம் ஐயாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வாக்களித்தார்கள் அதிலும் கல்குடா தொகுதி முஸ்லிம்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள்.

அப்போது முஸ்லிம்கள் தேவநாயம் ஐயாவை ஒரு தமிழராக பார்க்கவில்லை இன்னும் கல்குடாத் தொகுதியில் சில முஸ்லிம்களின் வீடுகளில் அவரது படம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவுமிக நீண்ட நெடிய பாரம் பரியத்தை கொண்டது அதை கொச்சைப்படுத்தும் உங்கள் சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நீங்கள் முனைவது மிகவும் கேவலமான அரசியல் சாக்கடைத்தனமாகும்.

தான்சார்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இனவாதம் பேசி காலங்கடத்துவதை கண்டுகொள்ளாமல் அவரை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை விட்டிருப்பதானது ‘படிப்பது தேவாரம் இடிப்பதுசிவன் கோயில்’ என்ற பழமொழியை ஞாபகப்படுத்துகிறது. முஸ்லிம்கள் ஏழைத்தமிழர்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதாக யோகேஸ்வரன் எம்.பி கட்டவிழ்த்து விட்டிருப்பதானது அவர்உலக ஞானமற்றவர் என்பதனை நிறுவி நிற்கிறது.

இது ஜனநாயக நாடு விரும்பியவர் விரும்பிய மதத்தை பின்பற்ற முடியும். அதிலும் மதமாற்றமானது சர்வசாதரணமாக இப்போது நடக்கிறது அப்படியென்றால் இந்துக்கள் அதிகம் பேர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அன்மையில் ஒரு முஸ்லிம் இந்து மதத்தைச் ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காய் கிறிஸ்தவர்கள் மதமாற்றுகிறார்கள் அல்லது இந்துக்கள் மதம்மாற்றம் செய்கிறார்கள் என்று உளறுவது புத்திசாலித்தனமான கருத்தாக அமையாது.

மாறாக அவர்களை மதம் மாறாமல் தடுக்கும் வழிவகைகளை குறிப்பிட்ட மதத்தினர் அறிந்து செயற்படுவதே புத்திசாலித்தனம். இதை விடுத்து ஆறாத புண்ணைவைத்துக்கொண்டு அனுதாபம் தேடும் நோயாளியைப் போல அலறுவது ஞாயமில்லை.இந்த விடயத்தை அரசியலாக்கி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேள்விக்குட்படுத்தி இருப்பது மத நல்லிணக்கத்தை இந்தப் பிரதேசத்தில் கேள்விக்குறியாக்கும் விடயமாகும்.

யோகேஸவரன் எம்.பி. இன் இனவாத கருத்தை எந்த விதத்தில் நியாயப்படுத்துகிறீர்கள் என்ற கேள்வி பொதுவாக எழுகின்றது.

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு உறுதி என்கின்ற தமிழரசுக் கட்சியின் உறுதி மொழியை யோகேஸ்வரன் எம்.பி. சிறிநேசன் எம்.பி போன்றோரின் கருத்துக்கள் தவிடு பொடியாக்கியுள்ளது. இவர்களின் இரட்டை வேடமும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிறிய முஸ்லிம் கல்வி வலயத்தையே அங்கீகரிக்க முடியாமல் கொக்கரிக்கும் இவர்கள் தனி அலகு தரும் அளவு பரந்த மனித நேயமிக்கவர்களல்லர். இவர்களின் இனவாதபோக்கை தமிழரசு கட்சியின் தலைமை கட்டுப்படுத்த வேண்டும்.

நல்லாட்சியின் ஏதிரிகளாக இவர்கள் வரலாற்றில் பதியப்படுமுன் தம்மைதிருத்திக் கொள்ளுமாறும் இன மத பேதமற்ற எமது சேவையில் இணைந்து செயற்படுமாறும் இவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துளார்

SHARE