வட்டக்கச்சி இராமநாதபுரம் விவசாயிகள் உர மானியம் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நடைமுறைப்பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று இராமநாதபுரம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாயிகள்,
தாங்கள் இந்த கால போகத்திற்குரிய உர மானியம் பெறுவதில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.
குறிப்பாக உர மானிய படிவத்தை நிரப்பி கையொப்பத்திற்கு கிராமசேவையாளரிடம் செல்லும்போது விவசாயக்காணியின் மூல ஆவணங்களை தருமாறு பணிக்கிறார்.
நாங்கள் இடம் பெயர்ந்த முள்ளிவாய்க்கால் சென்றவர்கள் எங்கள் ஆவணங்கள் அனைத்தையும் தொலைத்தவர்கள். சில விவசாயிகள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்பவர்கள் . காணிச் சொந்தக்கார்கள் வெளிநாடுகளில் இருப்பார்கள்.
இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி விவசாயத்திற்கான உர மானியம் பெறுவது, இதை விட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியை பெறுத்தவரையில் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலகங்களின் எல்லைப்பகுதிகளாக இருப்பதனால் சில விவசாயிகளுக்கு மேட்டுக்காணி கரைச்சி பிரதேசசெயலக பிரிவிலும்,
விவசாயக்காணி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலும் சில விவசாயிகளுக்கு மேட்டுக்காணி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலும் விவசாயக்காணி கரைச்சி பிரதேச செயலகபிரிவிலும் உள்ளது.
இதனால் நாங்கள் படிவங்களை பூரணப்படுத்தி கிராமசேவையாளரிடம் கையொப்பம் பெறமுடியமால் உள்ளோம்.
அவ்வாறு கையொப்பம் பெற்று பிரதேச செயலகங்களுக்கு செல்லும்போது பிரதேச செயலாளரினால் திருப்பி அனுப்படுகின்றோம்.
எனவே இவ்வாறன பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள நாங்கள் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எங்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வினைப்பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்கள்.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்,
நீங்கள் உர மானியம் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுத்தரத்தான் நாங்கள் இன்று மாவட்ட கமநல திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதிகளை உள்ளடக்கிய கிராம சேவையாளர்களையும் அழைத்து வந்துள்ளேன்.
ஏற்கனேவே கடந்த 26.09.2016ம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் நாங்கள் இந்த முறை இந்த மாவட்டத்தின் விவசாயிகளுக்கு உர மானியத்தை இலகுபடுத்தி வழங்குமாறு தீர்மானம் எடுத்தோம்.
அந்த தீர்மானம் இன்னும் பல கிராமசேவையாளர்களுக்கு கிடைக்கவில்லை இது வேதனைக்குரிய விடயமாகும்.
இருந்தும் உங்கள் பிரச்சினைகளை இந்த இடத்தில் இருக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரும் விளங்கி கொண்டு இருப்பார்கள்.
மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கான தீர்வு விரைவாக உங்களுக்கு பெற்றுத்தர நான் முழு முயற்சிகளும் மேற்கொள்வேன் என்றார்.
இந்த கலந்துரையாடலில் பாாரளுமன்று உறுப்பினர் சிறீதரனுடன் கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட கமநல ஆணையாளர் தயாரூபன் மற்றும் கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ், வட்டக்கச்சி இராமநாதபுரம் கிராமங்களளை உள்ளடக்கிய கிராம சேவையாளர்கள்,
இவர்களுடன் இரணைமடு கமக்கார அமைப்பின் தலைவர் சிவமோகன் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.