பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று சிறுநீர் கழித்த போது ரயில் மோதி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸிக்கு அருகில் உள்ள Nogent-sur-Marne என்ற ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இயற்கை உபாதை காரணமாக தண்டாவளத்தில் நின்று சிறுநீர் கழித்துள்ளார்.
அப்போது, தூரத்தில் ரயில் ஒன்று வந்துக்கொண்டு இருப்பதை வாலிபர் கவனிக்கவில்லை. அதே சமயம் தண்டவாளத்தில் நின்ற போது திடீரென கால் சறுக்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஓட்டுனர் ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் வாலிபர் மீது ரயில் ஏறிச்சென்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபரை பயணிகள் காப்பாற்ற முயன்றுள்ளனர். தகவல் அறிந்த ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஆனால் விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் வாலிபர் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
எனினும் வாலிபரின் பெயர் மற்றும் முகவரி பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
விபத்து நிகழ்ந்ததும் ரயில் ஓட்டுனருக்கு மது பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர் மது அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
விபத்திற்கு பின்னர் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பயணிகளுக்கு அதிகாரிகள் பேருந்து வசதியை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
தண்டவாளத்தில் சிறுநீர் கழித்தபோது ரயில் மோதி வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.