சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கிராம உத்தியோகஸ்தருக்கு மீண்டும் பதவி

248

தனது அலுவலகத்தில் வைத்து 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கிராம உத்தியோகஸ்தர் ஒருவருக்கு மீண்டும் கிராம உத்தியோகஸ்தர் பதவி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து புத்தளம் வனாதவில்லு பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வனாதவில்லு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலக்கம் 637/2 ரால்மடுவ கிராம சேவகர் பிரிவுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சென்ற 16 வயது சிறுமியை, அந்த கிராம சேவகர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, வனாதவில்லு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட கிராம சேவகரும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சந்கேதகநபர், விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பவும் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதேவேளை, இந்த வழக்கு தற்போது புத்தளம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சந்தேகநபர் தற்போது வனாதவில்லு பிரதேச செயலகப் பிரிவின் பிரிதொரு கிராம சேவகர் பிரிவில் பணிபுரிந்து வருவதாக, பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற போதும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையோ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதோ இதுவரை இடம்பெறவில்லை எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து எனக்கும் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆனால் குறித்த கிராம சேவகரை வேறு பிரதேச செயலகத்திற்கு மாற்ற அங்குள்ளவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்படி விரைவில் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்போம், என புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

SHARE