சிறுமி சேயா கொலை வழக்கு விசாரணை ஜனவரி 25 முதல்

285
கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சமன் ஜயலத் என்ற நபருக்கு எதிரான விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் நடத்துமாறு நீர்கொழும்பு நீதவான் சம்பா ஜானகி ராஜரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன்  30 சாட்சியாளர்களுக்கு அறிவிப்பாணைகளை அனுப்பி வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதி சேயா என்ற சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொட்டதெனியாவ காவற்துறையினர் ஆரம்பத்தில் பாடசாலை மாணவனையும் குடும்பதஸ்தர் ஒருவரையும் கைது செய்துடன் சமன் ஜயலத்ன என்ற நபரின் சகோதரரையும் கைது செய்தனர். மரபணு பரிசோதனைகளை அடுத்து நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது.

இந்த நிலையில், சமன் ஜயலத் என்ற நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரது மரபணு, சிறுமி சேயாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மரபணுவுடன் பொருந்துவதாக பின்டெக் நிறுவனம் மினுவங்கொட நீதவான் டி.ஏ. ருவான் பத்திரணவுக்கு அறிவித்தது. இதனடிப்படையில் சட்டமா அதிபர் சமன் ஜயலத் என்பவருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

sadeumi4

SHARE