சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்திக்காக வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

283
வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படவேண்மென கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புதிய வரவு செலவுத்திட்டத்தில் இதற்காக அதிகளவான நிதி ஒதுக்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர் தின செய்திக்குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களை விடவும் வடகிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்கள் போரின் பாதிப்புகளை நேரடியாக சந்தித்தவர்களாகவுள்ளனர். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்களை கடந்த பின்னும் கூட இந்த மாகாணத்துக்குரிய மக்கள் தற்போதுவரையில் போரின் கடுமையான பாதிப்புகளிலிருந்து மீள முடியாதவாறு பெருந்துயரத்துக்குள் அமிழ்த்தப்பட்டுள்னனர்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் சிறுவர்களுக்கு இலங்கையின் ஏனைய மாகாணங்களில் வாழும் சிறுவர்களை விடவும் பல குறைபாடுகளும், பிரச்சினைகளும் காணப்படுகின்றன. அத்தியாவசியமான தேவைகளும் பிரத்தியேகமான வசதி வாய்ப்புகளும் தேவைப்படுகின்றன.

கொடுமையான யுத்தத்தின் காரணமாக தாய் அல்லது தந்தை இருவரையும் இழந்துள்ள பிள்ளைகள், காணாமல் ஆக்கப்பட்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகள், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள், கடும் காயமுற்றுள்ள விசேட தேவைக்குட்பட்டுள்ளவர்களின் பிள்ளைகள் என்று மிகவும் மோசமான பாதிப்புகளுடன் சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இவர்களில் ஒருதொகுதி சிறுவர்கள் போரினால் அவையங்களை இழந்தும், துப்பாக்கிச்சன்னங்கள், எறிகணைச்சிதறல்களை உடலில் தாங்கிக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ரணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு மருத்துவ தேவைகள் காணப்படுகின்றன. அதேவேளை பாடசாலைக்கல்வியை கைவிட்டும், கைவிடும் நிலையிலும் உள்ளமையும் விசேடமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.போரின் நேரடி தாக்கங்களிலிருந்து மீள முடியாது தவித்துக்கொண்டிருக்கும் இந்த சிறுவர்களுக்குரிய கல்வி, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்துக்கே உண்டு. அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் மட்டும் பன்னிரண்டாயிரம் வரையான சிறுவர்கள் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளனர். ஆகவே புதிய அரசாங்கம் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் அறுவைச்சிகிச்சை உள்ளிட்ட விசேட மருத்துவ தேவைகளுக்கு என்று கூடியளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். வன்மம் காட்டாமல், பகையுணர்வு பாராட்டாமல் மனிதாபிமானத்தோடு புதிய அரசாங்கம் இதனை செய்ய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் கடந்த வருடங்களில் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்ட விவாதங்களின்போது வடக்கு கிழக்கு மக்களுக்குள்ள இவ்வாறான குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்குள்ள அத்தியாவசியமான தேவைகள், அவசியமான வசதிவாய்ப்புகள் தொடர்பிலும் பல தடைவைகள் எடுத்துக்கூறியும் அவற்றை கவனத்தில் எடுக்கவில்லை. எனவே புதிய அரசாங்கமாவது விசேட தேவைகள் தொடர்பில் கூர்ந்து கவனம் செலுத்துதல் வேண்டும். வறுமை, வரட்சி, தொழில்வாய்ப்பின்மை, இன்னபிற காரணிகளினால் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பிள்ளைகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறுவர் இல்லங்களே பொறுப்பேற்று அவர்களை பராமரித்து கல்வியறிவூட்டி வருகின்றன.

இவற்றில் பல சிறுவர் இல்லங்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் காருண்யர்களினதும், தொண்டு நல அமைப்புகளினதும் நன்கொடை நிதியிலேயே இப்பெரும் பணியை செய்து வருகின்றன.

எனவே இந்த சிறுவர் இல்லங்களின் சமுக நலப்பணியை ஊக்குவிக்கும் வகையில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான அமைச்சுகளும் தங்களின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். எவ்வாறாயினும் வடகிழக்கில் சிறுவர் இல்லங்களற்ற சூழலை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது என்றுள்ளது.

SHARE