தற்போது நாட்டில் சகல பிரதேசங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்துப் பாவனைப் பழக்கத்தை அதிகரிக்க வைக்கின்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இதனைத் தீர்ப்பதற்காகச் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் நவீன பொறிமுறை அவசியமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், போதை பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதுடன், அவர்களுக்கு இடம்பெறும் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்ட மூலம் கொண்டு வரப்படுவதோடு, சமூக மட்ட விழிப்புணர்வுகளும் இடம்பெற வேண்டும்.
சிறுவர்கள் இந்நாட்டின் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் எந்தச்சந்தர்ப்பத்திலும் மறந்து விடக்கூடாது.
நம்மிடமுள்ள பெறுமதியான பொருட்களை மிகவும் அவதானமாகப் பாதுகாக்கிறோம். ஆனால், நாம் பெற்ற பிள்ளைகளிடத்தில் அந்த கரிசனையைக் காட்டுவதில் சிலர் தவறி விடுகிறோம்.
சிறுவர்கள் விடயத்தில் பெற்றோரின் அசமந்தப்போக்கே அவர்களின் வாழ்க்கை சீரழிந்து செல்வதற்கான மிகமுக்கிய காரணமாகும்.
அநேகமான பெற்றோர் வறுமையைக் காரணங்காட்டி தமது பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பாராமுகமாக இருந்து விடுகின்றனர். சிறுவர்கள் வழி கெடுவதற்கு அதுவும் முக்கிய காரணமாகும்.
தன் பிள்ளை யாருடன் சேர்ந்து விளையாடுகிறது? பிள்ளையின் நண்பர்களில் சமூக விரோதமானச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் உள்ளனரா? பகுதி நேர வகுப்புக்குச் செல்லும் பிள்ளை சரியாக அங்கு செல்கின்றனரா? வகுப்பு முடிந்தவுடன் நேராக வீட்டுக்கு வருகின்றனரா?
பிள்ளையின் அன்றாடச் செயற்பாடுகள் எவை? போன்ற விடயங்களில் அவதானத்தைச் செலுத்த வேண்டும். அப்போது தான் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கவும், தவிர்க்கவும் முடியும்.
சிறுவர் துஷ்பிரயோகமும், சட்டவிரோத போதைவஸ்த்துப் பாவனைக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும். அப்போது தான் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்நல்லாட்சியில் மக்கள் பலத்த நம்பிக்கையிலிருக்கின்றனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நல்லாட்சி அரசின் மீது இருக்கின்றது.
அந்த வகையில், இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகிய சிறுவர்களுக்கு நாம் பாதுகாப்பான ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பது இன்றியமையாதவொன்றாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.