சிறைக்கொலை! முடிக்கப்பட்ட ராம்குமார்! மூடப்பட்ட சுவாதி கோப்பு

253

1468212069-4178

அதிகாரி: சார் வணக்கம் புழல் ஜெயில்

ராமராஜ் : நான் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் பேசறேன். புழல் சிறையில் ராம்குமார் சூசைட் செய்து கொண்டதாக சொல்கிறார்கள்.

அதிகாரி : அப்படி ஒன்றும் இல்லை சார் . உடம்பு முடியாமல் ஆஸ்பிட்டல் ஓ.பி.க்கு கூட்டிட்டு போயிருக்காங்க. அவங்க வீட்டுக்கு போன் பண்ணி சொன்னேன்

ராமராஜ்: என்ன முடியாம போச்சு அவனுக்கு? திடீர்னு! நேத்து நல்லா தான் இருந்தான். நான் பாத்துட்டு வந்தேனே

அதிகாரி: அப்படியா சார்… தெரியல சார். ..முடியலனு சொல்லி நம்ம டாக்டர் தான் கூட்டிட்டுப் போயிருக்காங்க

ராமராஜ் : சார் நேற்று அவனை பாத்துட்டு ஒரு மணி வரைக்கும் கூட இருந்தேன்.

அதிகாரி:அப்படியா? டாக்டர் சொன்னது என்னன்னா, சாப்பாடு சரியில்லனு சொன்னாங்க

ராமராஜ் : வேற ஒண்ணும் இல்லயே

அதிகாரி: வேற ஒண்ணும் இல்ல, ராயப் பேட்டை கூட்டிட்டு போனாங்க, யாரு ஆஸ்பிட்டல் போனாலும் வீட்டுக்கு இண்டிமேட் பண்ணுவோம் சார்.

ராமராஜ்: என்கிட்ட நியூஸ் ஏஜென்சி கேட்டால், இதே தகவல்களை சொல்லிரலாம்ல

அதிகாரி :சொல்லிடுங்க சார் இதே தகவல்தான் வீட்டுக்கு சொல்லிருந்தேன்.

ஞாயிறு மாலை 6 மணிக்கு இப்படித்தான் தெரிவித்துள்ளது சிறை நிர்வாகம். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே குற்றவாளியான ராம்குமார், சிறையில் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டான் என்று அதிர வைத்தது.

தமிழகத்தையே கலங்கடித்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் ‘நிர்பந்தக்கொலை’ நடந்து சரியாக ஒரே வருடத்தில் அதே தேதியில் (செப்.18) ராம்குமார் மரணச்செய்தி வெளியானது.

இந்த சிறைக் கொலை ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையையே கேள்விக் குறியாக்கியிருக்கிறது.

advertisement

ராம்குமார் கைது செய்யப்பட்ட பிறகும் என்கவுண்டர் பயத்தில் அவன் இருந்தான் என்பதைத்தான், தற்போது வேறு விதத்தில் நடத்திக்காட்டியிருக்கிறது சிறைத்துறை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

சுவாதி படுகொலையில் உள்ள மர்மங்கள் குறித்து ராம்குமார் கைதுக்கு முன்பும் பின்பும் குறித்த சிக்கலான வழக்கின் பின்னணிகள் மறைக்கப்பட்டு வந்த நிலையில்தான், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே நபரான ராம்குமாரின் உயிர் பறிபோயிருக்கிறது.

ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த ஹெச்.எஸ்-2 (High Security block) புளொக் என்பது உயர் பாதுகாப்பு கொண்ட செல்.

அதாவது, புழல் சிறைக்குள் ஐந்து புளொக்குகள் உள்ளன. இதில், பொதுவான கைதிகள் அடைக்கப்படுகிறார்கள்.

காந்தி புளொக் என்று சொல்லப்படும் கோரண்டின் புளொக்கில் 1 நாள் 2 நாள் கைது செய்யப்படும் தற்காலிக கைதிகளை அடைப்பார்கள்.

ஆனால், ஹெச்-1, ஹெச்-2 புளொக்குகள் தான் ஹை செக்யூரிட்டி கொண்டது. காரணம், அதில்தான் மிகப்பெரிய ரவுடிகள், தீவிரவாதிகள் என ரிஸ்க்கான கைதிகளை அடைத்து வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு புளொக்கிலும் சுமார் 60 செல்கள் இருக்கும். அதன், நுழைவாயிலில் 1 ஏட்டு, 1 வார்டர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

1 மணிநேரத் துக்கு ஒருமுறை அடிஷனல் ஜெயிலர் சைக்கிளில் ரவுண்ட்ஸ் வருவார்.

கைதி ஒருவேளை கோர்ட்டுக்கு செல்லவேண்டும் என்றால் எஸ்கார்டு போலீஸிடம் வயர்லெஸ்ஸில் கன்பார்ம் பண்ணிக்கொண்டு எண்ட்ரி புக்கில் பெயர், அப்பா பெயர், வெளியில் செல்வதற்கான காரணம் எல்லாம் எழுதி கையெழுத்துப் போட்டுவிட்டுத் தான் போகமுடியும்.

நூலகத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கான கார்ட்டை காண்பித்து விட்டு செல்லலாம். உடம்பு சரியில்லை என்றால் அருகிலுள்ள டிஸ்பென்ஸரிக்கு செல்லலாம்.

1 முதல் 5 புளொக்குகள் மற்றும் காந்தி புளொக்கில் இருப்பவர்களுக்கே இவ்வளவு கட்டுப்பாடு உள்ளது.

அப்படியிருக்க, ஹை செக்யூரிட்டி புளொக்கில் இருக்கும் ராம்குமார் நூலகத்துக்கோ, டிஸ்பென்ஸரிக்கோ செல்லவேண்டுமென்றால் கண்டிப்பாக வார்டர் கூடவே செல்லுவார்.

இதைவிட மிக முக் கியமானது. சம்பவம் நடந்தது ஞாயிற்றுக்கிழமை. சூப்பிரண்டெண்ட் கிளம்பி விடுவார் என்பதால் மாலை 4:45 மணிக்கெல்லாம் அனைத்து செல்களையும் மூடி விடுவார்கள்.

ராம்குமார் கிச்சனுக்குப் போனார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தண்ணீர் குடிக்க கிச்சனுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. காரணம், ஹெச்-1, ஹெச்-2 புளொக்கில்தான் எந்நேரமும் குடிதண்ணீர் இருக்கும்.

1 லிருந்து 5 புளொக்கிலுள்ளவர்கள் அங்கு வந்துதான் ப்ளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் பிடித்து போவார்கள். ஹெச்-1, ஹெச்-2 புளொக்குகள் சிறையின் மெயின் எண்ட்ரன்சிலேயே உள்ளன.

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ராம்குமார் கிச்சனுக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கு, 5 புளொக்குகளையும் கடந்துதான் சுமார் ணீ கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும்.

அனைவருக்கும் தெரிந்த முகம்… ஏற்கனவே, தற்கொலை முயற்சிகள் செய்ததாக சொல்லப்பட்ட ராம்குமார், வழியில் நிற்கும் வார்டர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கடந்துவிடமுடியாது.

அவர்கள் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு ராம்குமார் கிச்சனை நோக்கி சென்றிருந்தாலும் சிறைக்கைதிகளுக்கான இரவு உணவை கிச்சனில் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் கவனித்திருப்பார்கள்.

டிஸ்பென்ஸரிக்கு எதிரில், மிகப்பெரிய கிச்சன் வாசலில் 1 ஏட்டு, 3 கான்ஸ்டபிள்கள் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

அவர்களையும் மீறி கிச்சனுக்குள்ளே சென்றால், சுமார் 1800 சிறைக்கைதிகளுக்கான இரவு உணவை சமைக்க, சோற்றை அச்சடிக்க என கிட்டத்தட்ட 20-க்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள்.

அவர்களையும் தாண்டி உள்ளே சென்றால்தான் இடது புறத்தில் 3 கிரைண்டர்கள், மிளகாய் அரைக்கும் மெஷின் எல்லாம் இருக்கும்.

வலது புறத்தில் கூடுதல் ஜெயிலர் வேறு இருப்பார். இவர்கள் கண்ணில் எல்லாம் மண்ணைத் தூவி விட்டா “செவன்ட்வெண்டி’ வயரான மின் கம்பியை பிடித்து கடித்திருப்பான் ராம்குமார்?

அப்படியே, கடித்த உடன் தூக்கி வீசிவிடும் கரண்ட் வயரை தன் உடம்பில் சுற்றிக்கொண்டான் என்பது சாத்தியமே இல்லாதது.

எந்தக் கைதி மீது கண் வைத்து விட்டாலும் உடனடி ஆபரேஷனில் ஈடுபடுவது 6 பேர் கொண்ட விசேட குழு போலீஸ்தான்.

இவர்களை, விசாரித்தாலே ராம்குமாரின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை உறுதி செய்து விடலாம் என்கிறார் புழல் சிறையில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர்.

சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையின் டாக்டர்களிடம் விசாரித்த போது, மாலை 4:30 மணிக்கு விபத்து புளொக் கேஷுவாலிட்டிக்கு கொண்டு வந்தார்கள்.

பரிசோதனை செய்து பார்த்த போது அவர் எப்போதோ இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. மேலும், கழுத்தின் தோல் கிழிந்து சிறு சிறு காயங்கள் இருந்தன.

இடது பக்க மார்பில் இண்ட் மார்க் போட்டது போல காயம் இருந்தது. தோள் பட்டையிலும் சிறு கீறல் இருந்தது. வாய்ப்புறத்தில் பெரிதாக காயங்கள் இல்லை.

ஆனால், கூட் டம் அதிகமாக கூடி பரபரப்பானதால் ஒரு சில நிமிடங்களிலே யே காவல்துறை ராம்குமாரின் உடலை பிரேத அறைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றார்கள்.

புழல் சிறைக்கு வந்து விசாரணை நடத்திய திருவள்ளூர் பெண் மாஜிஸ்ட்ரேட் தமிழ்ச்செல்வியிடம் சாட்சியமளித்த ராம்குமாரின் சக சிறைவாசி பேச்சிமுத்து,

வைத்தியசாலை செல்லில் தனியாக அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை கண் காணிக்க இளங்கோவன், வெங்கட்ராமன் என்ற குண்டர் தடுப்புசட்ட கைதிகள் இருந்தார்கள் என்றும் சம்பவத்தன்று மாலையில் இரவு உணவு வாங்குவதற்காக ராம்குமாரை பேச்சிமுத்து திறந்து விட்ட போது, ஸ்விட்ச்பாக்ஸில் இருந்த ஃப்யூசுடனான வயரை வாயில் பிடித்து தரையில் அமர்ந்து விட்டான் என்றும், அதனால் எர்த் அடித்து, மின்சாரத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருப்பதாக சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.

ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் ஊதா நிற உள்ளாடையுடன் படுக்க வைக்கப்பட்டிருந்தது ராம்குமாரின் உடல்.

செப்டம்பர் 19ம் தேதி காலை சுமார் 8:45 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் தமிழ்ச்செல்வி பார்வையிட, உடன் வந்தவர் ஆதாரத்துக்காக ராம்குமாரின் உடலிலிருந்த காயங்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், ராம்குமார் சிறையில் மர்மமாக இறந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனையை அரசு கீழ்ப்பாக்கம் மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில்செய்ய வேண்டும் எனவும் ராம்குமாரின் அப்பா பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு இந்த அமர்வு உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றதுடன், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தடய அறிவியல் துறை மருத்துவ பேராசிரியர் செல்வக்குமார் தலைமையில் உதவிப் பேராசிரியர் வினோத், மணிகண்டராஜா ஆகியோருடன் ஸ்டான்லி மருத்துவமனை தடய அறிவியல்துறை பேராசிரியர் பால சுப்பிரமணியனையும் கூடுதலாக நியமித்து உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

ஒருமாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விடுவோம் என்றார் விசாரணை அதிகாரியான ஏ.சி. தேவராஜ். ஆனால், மூன்று மாதங்களாகியும்கூட இன்னும் குற்றப்பத்திரிகையை போலீஸால் தாக்கல் செய்யமுடியவில்லை.

காரணம், ராம்குமார் தான் கொலையாளி என்பதற்கான ஆதாரங்கள் போலீஸிடம் இல்லை. சனிக்கிழமை ராம்குமாரை சந்தித்து சீக்கிரம் பிணையில் எடுத்து விடுவோம் என்று நம்பிக்கையூட்டிய போது நல்லமுறையில்தான் பேசினார் ராம்குமார்.

திங்கட்கிழமை அவரை பிணையில் எடுப்பதற்கான முயற்சியில் இருந்தோம். அவர் வெளியே வந்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால், போலீஸே ராம்குமாரின் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி கொலை செய்திருக்கலாமோ? அல்லது வேறு விதத்தில் உயிரைப் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கைக்குள் அதிகார வர்க்கத்தின் கரங்கள் தலையிடக்கூடாது என்பதற்காக எங்கள் தரப்பில் வேறொரு மருத்துவரையும் பிரேத பரிசோதனை செய்யக்கோரினோம்.

ஆனால், அதற்குப் பதிலாக, மற்றொரு அரசு மருத்துவரையே கூடுதலாக நியமித்தால் ராம்குமாரின் மரணத்துக்கு உண்மையான காரணத்தை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஆனாலும் இது தமிழக காவல்துறையின் திட்ட மிட்ட படுகொலை என்பதை அம்பலப்படுத்துவோம் என்கிறார் ராம்குமாரின் வழக்கறிஞர்களில் ஒருவரான ரவீந்திரன்.

ராம்குமாரின் மர்ம மரணத்தை சிறைக் கொலையாகவே பார்க்கும் அவரின் வழக்கறிஞர்கள், சுவாதி கொலையின் உண்மைகளை மூடி மறைக்க சதி நடப்பதாக சந்தேகப்படுகிறார்கள்.

சுவாதி கொலை போலவே, ராம்குமார் மர்ம மரணத்திற்கும் நீதியைப் பெறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மருத்துவ அறிக்கை, நீதிமன்ற விசாரணை, மனித உரிமை கமிஷன் இவற்றின் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன.

விரைவில் மர்ம முடிச்சுகள் அவிழும்.

SHARE