கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து வெலிகடை சிறைச்சாலை நோக்கி சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்களைக் கொண்டு சென்ற குறித்த சிறைச்சாலை பஸ் மீது, கார் மற்றும் மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத சிலர் தெமட்டகொடை பகுதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது அந்த பஸ்ஸில் இருந்த தெமட்டகொடை சமிந்த எனப்படும் சமிந்த ஜெயநாத் எனும் சந்தேகநபர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வரும் சமிந்தவின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைய விரைவில் காயமடைந்த சந்தேகநபரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளதோடு,சிறைச்சாலை தலைமையகமும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
- சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கி பிரயோகம்..இரத்த கரையை அடிப்படையாகக் கொண்டு விசாரணை !
சிறைச்சாலை பஸ்ஸை இலக்கு வைத்து தெமட்டகொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரத்த கரைகளை அடிப்படையாக வைத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கறுப்பு நிற ஐபிரட் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்தவர்களினால் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டதை அடுத்து, சிறை காவலர்கள் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளனர்.
இதன்போது துப்பாக்கி பிரயோகம் நடாத்திய சந்தேகநபர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தின் காயமடைந்த நபருடையது என சந்தேகிக்கப்படும் இரத்த கரைகள் வீதியோரத்தில் காணப்பட்டதை அடுத்து, அதனூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.