சிவில் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, அடிப்படைக்கட்டமைப்பான காவல் துறை அமைப்பொன்றை ஆரம்பிக்கும் எண்ணம் தேசியத்தலைவரின் மனதில் உருவானது.

480

 

 

2003ம் ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை நிலவிய காலப்பகுதியில் ஓர் நாள் இரவு நேரம்; கிளிநொச்சியின் பரந்தன் சந்தியில் நின்றிருந்த ஒரு வயதான் தாயார் பதற்றத்துடன் காணப்பட்;டுக் கொண்டிருந்தார்.

அன்று மாலை தான் புலம்பெயர் நாடொன்றில் வசிக்கும் தனது மகளுடன் உரையாடுவதற்காக பரந்தன் சந்தியில் அமைந்திருந்த தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வந்திருந்தார். தனது மகளுடன் நீண்ட நேரம் உரையாடியதில் அவர் செல்ல வேண்டிய அன்றைய நாளுக்கான இறுதிப்பேருந்தை தவற விட்டிருந்தார்.

1524705_1845327732358491_1227007136754257612_n 11009136_1845327985691799_7303028245831200408_n 11067678_1845329052358359_2640407066926741315_n 11108676_1845329265691671_5390969129179179265_n 11140254_1845327775691820_314035761634805949_n 11146566_1845329242358340_3727761113302667770_n

அது புலிகளின் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமென்பதால் அங்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் அத்தாயாருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் தனது பிரச்சினையை மீண்டும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு புலம்பெயர் நாட்டில் இருக்கும் தனது மகளுக்கு அறிவிக்கின்றார்.

அடுத்து வந்த சில நிமிடங்களுக்குள் தமிழீழ காவல் துறையின் வாகனமொன்று அவ்விடத்திற்கு வந்து சேர்கின்றது. அதிலிருந்து இறங்கிய ஓர் காவல்துறை பெண் அதிகாரி அத்தாயாரின் அருகில் வந்து அவரது பெயரை சொல்லி அழைக்க அத்தாயாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ………… அவ்வளவு விரைவாக அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று கற்பனை செய்து கூடப்பார்த்திருக்க மாட்டார்.

■ உண்மையில் அச்சில நிமிடங்களுக்குள் என்னதான் நடந்தது?

அத்தாயார் தன் நிலமையை புலத்திலிருந்த தனது மகளுக்கு அறிவிக்க, மகள் கிளிநொச்சியிலிருந்த காவல்துறையின் நடுவகப்பணியகத்திற்கு அறிவிக்க, அத்தகவல் காவல் பணிமனைக்கும் சுற்றுக்காவல் பிரிவுக்கும் அறிவிக்கப்பட என்று நொடிப்பொழுதில் நடந்த தகவல் பொறிமுறையினால் அடுத்த முப்பது நிமிடங்களில் அத்தாயார் தனது வீட்டிற்கு சென்றடைந்தார்.

இவையனைத்தையும் தனது தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக செவிமடுத்துக் கொண்டிருந்த நடேசண்ணை மனத்திருப்தியுடன் தனக்கு விருப்பமேயான தேநீரை மீண்டும் ஒரு முறை அருந்தி விட்டு அடுத்த பணிக்காக புறப்படுகின்றார்.

அதிகாலை 02;;.00 மணி, அமைதியுடன் உறங்கிக் கொண்டிருந்த புதுக்குடியிருப்பு சந்தியால் அவரது வாகனம் திரும்பிய போது அங்கு நான்கு இளம் பெண்கள் துவிச்சக்கரவண்டிகளில் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் இயக்கத்தின் தொழிற்சாலையொன்றில் பணிபுரிகின்றவர்கள். இரவு நேர பணிகளை முடித்துக்கொண்டு எந்தவித அச்சவுணர்வுமின்றி வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள்;. தமிழர்களின் தாயகத்தில் இரு அன்றாடக்காட்சிதான். ஆனால் அதற்காக உறக்கமின்றி உழைத்த மனிதர்கள் பலர் அவர்களில் ஒருவர்தான் நடேசண்ணை.

பாலசிங்கம் மகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பிறந்தது வல்வெட்டித்துறையில். தேசியத்தலைவரின் உறவினரான இவர் சிறுவயது முதலே இடதுசாரி தத்துவங்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தமையினால் தனது சொந்த வாழ்க்கையி;ல் கூட புரட்சிகரமான எண்ணங்களையே கொண்டிருந்தார்.

1970 களில் இலங்கை காவல் துறையில் இணைந்து பணியின் நிமித்தம் தென்னிலங்கை செல்கின்றார். நாரஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் தன்னுடன் பணியாற்றிய சக பொலிஸ் யுவதியை காதலித்து திருமணம் செய்துகொள்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் மத்திய வகுப்பில் பிறந்த வளர்ந்த ஒரு இளைஞன், 1970 களில் சாதி, இனம், மதம், பிரதேசம் என்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி திருமணம் செய்வது என்பது அன்றைய காலத்தில் மிக கடினமான விடயமாக இருந்தது. ஆனாலும் சமவுடைமை கொள்கையில் பற்று மிக்க நடேசண்ணைக்கு முன்பாக எல்லாத்தடைகளும் தகர்ந்து போயின.

■ தமிழீழ விடுதலைப்புலிகளுடனான தொடர்புகள்.

1983ம் ஆண்டின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்திய போது நடேசண்ணையும் அதன்பால் ஈர்க்கப்படுகின்றார். 1984ம் ஆண்டு யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல் கிட்டு அவர்களின் தொடர்பு கிடைக்கப் பெறுகின்றது.

இதன் மூலம் நடேசண்ணை உள்ளுக்குள் இருந்து வழங்கிய தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக திட்டமிட்டு யாழ் பொலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தின் பின்னர் தன்னை முழுநேர உறுப்பினராக புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்ட நடேசண்ணை 1984ம் ஆண்டு தென்னிந்தியாவுக்கு பயணமானார்.

தமிழ் நாட்டில் தேசியத்தலைவர் அவர்களை சந்தித்த நடேசண்ணைக்கு இயக்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர் பணி வழங்கப்படுகின்றது. அங்கு நின்றிருந்த வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த போராளியொருவரால் ~~அங்கிள்” என அழைக்கப்பட அதுவே நடேசண்ணையை காலப்போக்கில் அவருடன் நெருக்கமானவர்கள் அங்கிள் என அழைக்கப்பட வழிகோலியது.

பின் 1987 ம் ஆண்டு தாயகம் திரும்பிய நடேசண்ணை இந்திய இராணுவ – புலிகள் போர்க்காலத்தில் கைது செய்யப்பட்டு பலாலி சிறையில் அடைக்கப்பட்டு 1990 இன் ஆரம்பம் வரை தடுத்து வைக்கப்படுகின்றார்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டிய தேவையுள்ளது. ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு குடும்பத்தலைவன் இணைவதற்கும், ஒரு இளைஞன் இணைவதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

ஒரு குடும்பத்தலைவன் தலைமறைவு வாழ்க்கை வாழும்போது போராட்டப் பணிகளில் ஈடுபடும் போது, அல்லது சிறையில் அடைக்கப்படும் போது, பொருளாதார ரீதியாகவும், சமூக பாதுகாப்பு ரீதியாகவும் அப்போராளியின் குடும்பமும் சேர்ந்தே போராட்டப் பழுவை சுமக்க வேண்டியுள்ளது.

இதன் அநுபவவலியை திருமணம் முடித்த பின்பும் போராட்டப் பணியிலிருந்த போராளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் நன்கு உணர்வார்கள். இந்த வகையில் பெரும்பான்மை இனத்தில் பிறந்தும், தமிழ் மக்களின் போராட்டப் பழுவில் தானும் ஒரு பங்காளியாகி இறுதிவரை அதற்காகவே வாழ்ந்த திருமதி. வனித்தா மகேந்திரன் அவர்களை பெருமையுடன் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

■ நடைமுறை அரசுக்கான முதற் கட்டமைப்பான தமிழீழ காவல்துறை

1990 களின் ஆரம்பத்தில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அத்துடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்த சுமார் 08 இலட்ச்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தேவையான கட்டமைப்புகளை செய்துகொடுக்க வேண்டிய பொறுப்பு புலிகளின் தலையில் விழுந்தது.

இந்த வேளையில்தான் சிவில் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, அடிப்படைக்கட்டமைப்பான காவல் துறை அமைப்பொன்றை ஆரம்பிக்கும் எண்ணம் தேசியத்தலைவரின் மனதில் உருவானது.

ஆளணி, சீருடை, கட்டளை விதிகள், பதவி நிலைகள் ஊதியம் என்று முற்றிலும் மரபு வழி தொழில் சார்ந்த ஒரு காவல்துறை கட்டமைப்பை போராடும் விடுதலை அமைப்பொன்றினால் நீண்ட காலத்திற்கு கட்டி வளர்க்க முடியாது என பல துறைசார் அறிஞர்களும் ஆலோசனை கூறிய போதிலும் தலைவர் அவர்கள், நடேசண்ணையிடம் காவல்துறை அமைப்பதற்கான பொறுப்பை ஒப்படைத்தார்.

தலைவர் அவர்களின் நம்பிக்கையை செயல்வடிவமாக்கினார் நடேசண்ணை. 19;.11.1991 அன்று யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உருவான தமிழீழ காவல்துறை 17.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்த அர்ப்பணிப்பு மிக்க பயணம் உலகப் புகழ் வாய்ந்தது. (இது பற்றி வேறோர் பந்தியில் பார்ப்போம்)

நடேசண்ணை தனக்கு வழங்கப்பட்ட பணியின் ஊடக தமிழ் சமுதாயத்தின் உட்கிடையாக காலம் காலமாக புரையோடிப்போயிருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுற்பட்டார். குறிப்பாக சாதிக்கட்டமைப்பிற்கு எதிரான இரும்புக்கரம் கொண்டு நசுக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்தார்.

காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக்காலத்தின் போதே சாதிய அமைப்பிற்கெதிரான வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் விரிவுரையாளராக செயற்பட்டவர் மதிப்புக்குரிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1992ம் ஆண்டு முழுவதும் சாதியக்கட்டமைப்பிற்கெதிரான தர்மயுத்தத்தில் தமிழீழ காவல்துறை ஈடுபட்டது. தென்மராட்ச்சியில் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கடும்போக்கான நடவடிக்கைகளால் நடேசண்ணை மீது சில விமர்சனங்கள் வீசப்பட்டாலும் அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.

அடுத்து பெண்ணுரிமை விடயத்தில் தெளிவான பார்வையை கொண்டிருந்தார்;. இதற்கு நல்ல உதாரணம் ஒன்றை கூறமுடியும். தமிழீழ காவல்துறையின் ஆரம்பநாட்களிலேயே (1991 இறுதிப்பகுதி) மிகப்பெரிய தலையிடியொன்று வந்து சேர்ந்தது.

அதாவது, யாழ் பல்கலைக்கழக மாணவனொருவன் தனது சக மாணவி ஒருவரை நடுவீதியில் வைத்து தாக்கியதில் அம்மாணவி செவிப்புலனை இழந்திருந்தார். இப்பிரச்சினையை கையாளும் பொறுப்பு காவல்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் பல்கலைக்கழக மட்டத்தில் அரசியற்பணிகளை முன்னெடுத்தலில் பல பிரச்சனைகள் தோன்றலாம் என பலராலும் எச்சரிக்கப்பட்டும் நடேசண்ணை நீதி தவறாது நடவடிக்கையை எடுத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ~~திருமண ஏற்பாட்டு குழுவின்” பொறுப்பாளராக சமகாலத்தில் பணியாற்றிய நடேசண்ணையால் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இதனால் தானோ என்னவோ நடேசண்ணை ~~குடும்பக் கட்டமைப்பு” என்பதில் ஆதீத நம்பிக்கை உள்ளவராக காணப்பட்டார்.

ஒரு குடும்பத்தின் உடைவு அல்லது திருமண முறிவினால் ஏற்படும் விளைவுகள் அடுத்த தலைமுறைக்கும் தொடரும் என அடிக்கடி கூறுவார். இதனால் அவரது ; ~~விவாகரத்து பூச்சியம்” என்ற கொள்கை சிலருக்கு பழமை வாதமாக கூட தென்பட்டிருக்கலாம்.

(உள்ளுணர்வுகளில் நம்பிக்கையுள்ளவர்களுக்காக கீழே உள்ள குறிப்பை எழுதுகின்றேன்).

ஒர் நாள் காலை நடேசண்ணையை சந்திக்க ஒரு சோடி வந்தது. பகல் முழுவதும் நீண்ட தர்க்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதியில் அந்த ஆண் மட்டும் வெளியே சென்றுவிட பெண் மட்டும் நடேசண்ணைக்கு முன்னால் அழுதுகொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவரும் சென்று விட்டார்.

நடேசண்ணையும் கவலையுடன் காணப்பட்டார். என்ன சம்பவம்? என்று கேட்க விரும்பினாலும் கேட்க முடியாதல்லவா, ஆனால் வழமைக்கு மாறாக அன்று நடேசண்ணையே வாய் திறந்தார். அந்த காதல் சோடி இருவருமே தனிப்பட்ட ஆளுமையில் அந்த நேரத்தில் முக்கியமானவர்கள். ஆனால் காதலன், காதலியை பிரிவதற்கு முடிவெடுத்து விட்டான்.

அதற்காக காதலி மீது தேவையற்ற பழிகளை, அவதூறுகளையும் பரப்பி வந்தான். இறுதியில் நடேசண்ணையிடமும் குற்;றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தான். எல்லாவற்றையும் அவதானித்த நடேசண்ணை அமைதியாக இருந்தாலும் முப்பது வருடத்திற்கு மேற்பட்ட அவரது போலீஸ் அனுபவம் அவருக்கு உண்மையை உணர வைத்து விட்டது.

மறுநாள் வருமாறு இருவரையும் அனுப்பி விட்டார். ஆனால் எங்களை பார்த்து ~~பெண்பாவம் சும்மா விடாது” என்று சொல்லி விட்டு உடனடியாகவே புறப்பட்டு சென்று விட்டார். மறு நாள் ஒரு துக்ககரமான செய்தி வந்திருந்தது. அக்காதலன் விபத்தொன்றில் உயிரிழந்தார் என்பதாகும்.

நடேசண்ணையின் பல்வேறுபட்ட பண்புகளில் ஒழுக்கம் என்ற விடயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டேயாகவேண்டும். 1991ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவர் பல நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் அவர் பங்கு பற்றியிருந்தார்.

எனது அனுபவத்தில் ஒரு நாள் கூட அவர் பிந்தி வந்ததில்லை.~~நேரம் தவறாமை” என்ற விடயத்தில் மிகவும் கண்டிப்பானவர். அதே நேரம் சீருடை என்பது நம் தேசிய அடையாளமாக இருப்பதனால் அது முறையாகவும், சுத்தமாகவும் அணியப்பட வேண்டும் என்பதில் கவனத்துடன் இருப்பார். ~~ஒழுக்காற்று நடவடிக்கை” என்ற விடயத்தில் நடேசண்ணையின் பாணி இயக்க மட்டத்திலே புகழ் பெற்றிருந்தது.

சரி பிழைக்கப்பால் நோக்கும் போது சகல அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருந்த தமிழீழ காவல்துறை அமைப்பினுள் ஒழுக்கம், கட்டுப்பாடு மீறப்படும் பட்சத்தில் அது அப்பாவிப் பொது மக்கள் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதனை இரண்டு காவல்துறைகளிலும் பணியாற்றிய நடேசண்ணை நன்கு உணர்ந்திருந்தார். அதற்காக அவர் ~~அங்குசத்தை” அளவுக்கதிகமாக பாவித்திருக்கலாம்.

ஆனால் இதற்கு மறுதலையாக, ஏதாவது விடயமாக அவரது வீட்டிற்கு செல்ல நேர்ந்தால் ஒரு மகனை தந்தை எப்படி வரவேற்று உரையாடுவாரோ அப்படி நடந்து கொள்வார். முற்றிலும் எங்களது தனிப்பட்ட விடயங்களைப் பற்றியே கலந்துரையாடுவார். காவல்துறையில் நடந்த சம்பவங்களை பற்றி மறந்தும் கேட்கமாட்டார்.

2007 நவம்பர் 02 பல மாற்றங்களை ஏற்படுத்திய நாள். அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்கள் வீரச்சாவடைய, அவ்விடத்திற்கு நடேசண்ணை நியமிக்கப்படுகின்றார்.

உண்மையில் இது நடேசண்ணைக்கு சோதனை காலம் என்பதனை அவரே அறிவார். ஆனாலும் தலைவர் அவர்களின் கட்டளையை மீற முடியவில்லை. அன்றைய திகதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முப்பதுக்கும் மேற்பட்;ட நாடுகளால் தடைசெய்யப்பட்டிருந்தது.

மன்னார் முன்னரங்கில் கடும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆளணி விடயத்தில் உள் நாட்டிலேயே பெயர் கெட்டுப்போயிருந்தது. இந்த நிலையில் அவரால் செய்வதற்து எதுவுமே இருக்கவில்லை.
ஆனாலும் நிலமையை புரிந்து கொண்ட நடேசண்ணை பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்றவும், தமிழ் தேசியத்தின் பேரம்பேசும் சக்தியான இயக்கத்தை காப்பற்றவும் கடுமையான முயற்சிகளை எடுத்தார்.

குறிப்பாக உபகண்டத்துடன் உறவுகளை சீர் செய்யும் பணிகளை முன்னெடுத்தார். இதற்காக அவர் இயக்கத்தின் சகல மட்டத்திற்கும் ஏறி இறங்கினார். 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் உள்ளடக்கத்திற்கு நடேசண்ணையின் கருத்துக்களும் செல்வாக்கு செலுத்தியிருந்தன என்பது உய்த்துணரக் கூடியதே.

2009 சனவரியில் விசுவமடு, பெப்ரவரி புதுக்குடியிருப்பு, ஏப்ரல் 14 இரட்டை வாய்க்கால் என நடேசண்ணையின் முயற்சி விக்கிரமாதித்தன் கதையாக தொடர்கின்றது. இறுதியில் 2009 மே முதல் மாதம் இரவு ஓர் உடன்பாடு எட்டப்பட இருந்தது ஆனால் ~~சில கதவுகள்” திறக்கப்படாததால் அதுவும் கைகூடவில்லை. அழிவு நிச்சயிக்கப்பட்டு கொண்டிருந்தது.

2009 மே 15ம் நாள் முள்ளிவாய்க்காலில் இயங்கிய கடைசி வைத்திய நிலையமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதனைத் தொடர்ந்து, மிகப்பெரிய மனித அவலம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்த 48 மணிநேரங்களில் மரண வீதம் அதிகரித்தது. காயமடைந்தோரின் தொகை அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

மரணமடையாத காயக்காரர்கள் புழுவைப்போல் ஊர்ந்து கொண்டிருந்தனர். அதனை விட உணவு, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. மே16 இரவுநேர ~~இறுதியுடைப்பிற்கு” செல்பவர்கள் தவிர ஏனையவர்கள் ஆயுதங்களை கைவிடுதல் என்ற முடிவு எடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து அரசுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை நடேசண்ணை மேற்கொண்டார்.

■ அதன் பின் நடைபெற்ற விடயங்கள் யாவரும் அறிந்ததே.

தோல்வி உறுதியென்று தெரிந்தும் இறுதி மூச்சுவரை போராடி வீரத்துடன் வீழ்ந்த ஸ்பாட்டாவின் 300 வீரர்கள் எழுதிய வரலாற்றை மீண்டும் ஒரு முறை புலிவீரர்கள் முள்ளிவாய்க்காலில் எழுதினார்கள். அவர்களுக்கு வீரவணக்கங்கள்.

அதே வேளை போர் முடிந்ததாக கூறப்பட்டு ஆறு வருடங்கள் கழிந்த போதிலும், போரின் வடுக்களை விழுப்புண்களாக ஏந்தியும், இன்னும் சிறைகளில் அடைபட்டும், புசிப்பதற்கு வழியின்றி பசியுடன் வாடியும், ஊரையும் உறவையும் விட்டு புலம்பெயர்ந்தோடியும், சிறுமதியினரின் அவதூறுகளை பெருமனதுடன் தாங்கியும் சுதந்திர வாழ்வுக்காக காத்திருக்கும் என் உறவுகளை நெஞ்சிலிருத்தி இப்போதைக்கு நிறைவு செய்கின்றேன்.

இன்னும் வரும்.
இ.உயிர்த்தமிழ்

SHARE