சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையில் சட்டவிரோதமாக முதலிடப்பட்ட ரூபா 157.5 மில்லியன் பணம்அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது குறித்து, பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் நேற்றைய தினம் கடுவெல நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை அடுத்து, நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக தெரிவிக்கப்படும் கடுவெல மற்றும் மாத்தறை ப்ரவுண்ஹில் ஆகிய காணிகளையும் அரசசுடைமையாக்க தீர்மானித்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடுவெல காணியை பொலிஸ் பயிற்சி மத்தியநிலையமாகவும் மாத்தறை காணியில் சுற்றுலா பயிற்சி மத்தியநிலையமொன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.