இந்தியாவின் விருப்பம் போல பொறுமையுடன் காத்திருப்போம் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

374

 

சீதையின் காத்திருப்பும் கும்பகர்ணனின் உறக்கமும்…

11011611_871859802871141_5962165051257091543_n

இந்தியாவின் விருப்பம் போல பொறுமையுடன் காத்திருப்போம் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த போது, பொறுமையுடன் இருங்கள் என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் அறிவுரைக்கு அமைவாகவே பொறுமையுடன் காத்திருப்போம் என்று முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பொறுமையுடன் இருங்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்தும் பொறுமையுடன் காத்திருப்போம் என்ற முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்தும் வேறுபட்டவை என்றே பொருள் கொள்ளத்தோன்றும்.

அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதை, இராமனின் வருகைக்காக காத்திருந்தாள். அந்தக் காத்திருப்பு இராமர் வந்து தன்னை மீட்கவேண்டும் என்ற நினைப்போடு சார்ந்தது.

எனினும் சீதையின் பொறுமைக்கான நோக்கத்தை இராவணன் அறிந்திலன். எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே சீதை பேசாதிருக்கிறாள் என்பது இராவனேஸ்வரனின் நினைப்பு.

ஆனால் அனுமனுக்கும் சீதைக்கும் மட்டுமே அந்த இரகசியம் தெரிந்திருந்தது. இராமன் தன்னை அழைத்துச் செல்வதே அவனுக்குப் பெருமை தருவதாகுமென்று வாயுபுத்திரனிடம் கற்பின் செல்வி கூறிய செய்தியை யாரும் அறிந்திலர்.
அதேநேரம் இலங்கை வேந்தனுடன் இராமர் யுத்தம் புரிய வந்துள்ளார். போர் தொடங்கிவிட்டது. கும்பகர்ணன் நீள் உறக்கம் கொள்கின்றான். அவனின் உறக்கத்தைக் கலைக்க ஒரு பெரும் சேனை களத்தில் இறங்க வேண்டியதாயிற்று. கும்பகர்ணனின் உறக்கம் பொறுமையின் பாற்பட்டதோ அல்லது காத்திருப்புக் கானதோ அல்ல. அது உறக்கம் என்னும் இருளுக்குள் அகப்பட்ட தன்வினைப்பயனாகும்.

கும்பகர்ணன் உறங்காமல் இருந்திருந்தால், இராமர் சேனை இலங்கையின் எல்லையில் வைத்தே விரட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணுவதில் தப்பில்லை.

ஆக, கும்பகர்ணனின் உறக்கம் சோம்பலின் பாலானது. அந்த உறக்கம் அவனின் இனம் அழிவதற்கே உதவியது. ஆனால் சீதையின் காத்திருப்பு இலட்சியத்தை அடைவதற்கு வழிவகுத்தது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பிரதமர் மோடி கூறிய பொறுமை என்பது சீதையின் பொறுமையை ஒத்தது.

எங்கள் முதல்வர் கூறுகின்ற, பொறுமையுடன் காத்திருப்பு என்பது கும்பகர்ணனின் உறக்கம் போன்றது. பொறுமையாக இருங்கள் என்று பிரதமர் மோடி கூறிவிட்டார் என்பதற்காக; பேசாதிருப்பது அல்லது ஓய்வெடுப்பதென்று யாரும் பொருள்கொள்ளக் கூடாது.

அவ்வாறு பொருள்கொண்டால் தமிழினத்தின் இலட்சியம் தடைப்பட்டுப் போகும். எனவே, பொறுமையாக இருத்தல் என்பது; தீர்மானங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை ஒத்திவைத்தல் என்றே பொருள்படும்.

அதற்காக ஜெனிவாவிற்குச் சென்று சர்வதேச விசாரணையை துரிதப்படுத்துங்கள்; உள்ளக விசாரணையில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றெல்லாம் எடுத்துரைப்பதை ஒரு போதும் ஒத்திவைக்கக் கூடாது.

அது எங்களின் உரிமையைப் பெற்றுத்தரக் கூடிய முக்கிய விடயம். இந்தியாவை எந்தளவு தூரம் நாம் நம்புகிறோமோ அதற்கு ஈடாக அல்லது ஒரு படி மேலாக இலங்கை மீதான சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்துவது மைத்திரிக்கோ மோடிக்கோ எதிரானதல்ல. அது போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்போடு சம்பந்தப்பட்டது.

ஆகையால், பொறுமையுடன் காத்திருப்போம் என்று முதல்வர் விக்னேஸ்வரன் கூறியதன் கருத்து உரிமையை பெறுவதற்கான முயற்சியில் எந்தத் தாமதத்தையும் தடையையும் ஏற்படுத்தாது என்பதாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

SHARE