சீனாவின் ஆட்சியை தீர்மானிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு ஆரம்பம்

456

சீனாவின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வான அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தலைநகர் பீஜிங்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்று ஆரம்பமானது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆளமுடியும் என்பதால் இந்தக் கட்சி மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் 2,000க்கும் அதிகமான பிரதிநிதிகள் முன் மூன்று மணி நேரத்திற்கு மேல் உரை நிகழ்த்தினார்.

மூடிய அறையில் இடம்பெறும் இந்த மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடைபெறுகிறது. அடுத்த தவணைக்கு நாடு எந்த திசையில் செல்வது மற்றும் ஆளப்போகின்றவர்கள் யார் என்பது இந்த மாநாட்டின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு சீன தலைவராக தேர்வான ஷி, தனது ஆதரவை பலப்படுத்தி இருக்கும் நிலையில் தொடர்ந்தும் கட்சியின் தலைவராக நிலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் அடுத்த ஐந்து ஆண்டு திட்டம் பற்றியும் இந்த வாரத்தில் முடிவடையவுள்ள இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்படுகிறது.

இதன்மூலம் நீண்ட இடைவேளைக்கு பின்னர் சீன ஜனாதிபதி ஒருவருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐந்தாண்டு பதவிக்காலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நீண்ட இடைவேளைக்கு பின்னர் இப்போதே கட்சி, ஆட்சி மற்றும் பாதுகாப்பு படை ஆகியவற்றின் தலைமை ஒருவரிடம் குவிந்துள்ளது. அடுத்த வாரம் இம்மாநாடு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு முடிந்தவுடன், கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் பெயர்கள் வெளியிடப்படும். இக்குழுவே நாட்டுக்கான முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவாக இருக்கும்.

மாநாட்டில் உரையாற்றிய ஷி ஜின்பின் சீனாவின் புதிய வெற்றிகள் பற்றி குறிப்பிட்டார். இந்த புதிய யுகத்தில் சீனாவின் பண்புகளோடு சோசலிசம் செயற்படும் என்று குறிப்பிட்ட அவர் சீனா உலகின் மிகப்பெரிய சக்தியாக வரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

2050 வாக்கில் ‘சோசலிச நவீனமயமாக்கலை’ அடைய இரண்டு கட்டத் திட்டம் ஒன்றை விவரித்த ஷி, பிரிவினை வாதத்துக்கு எச்சரிக்கைவிடுத்தார். ஷின்ஜியாங், திபெத், ஹொங்கொங் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ள இயக்கங்களை குறிக்கும் வகையில் அவரது எச்சரிக்கை அமைந்திருந்தது. தாய்வான் சீனாவின் ஒரு அங்கம் என்ற அரசின் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார் ஷி.

அதே நேரம், உலகத்துடனான தமது கதவுகளை சீனா மூடிக்கொள்ளாது என்று கூறிய ஷி, வெளிநாட்டு மூதலீட்டாளர்களுக்கான தடைகளை குறைப்பது உள்ளிட்ட மேலதிக பொருளாதார சீர்திருத்தங்கள் வரும் என்று உறுதியளித்தார்.

SHARE