சுகாதாரக் கேடான முறையில் பேணப்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கிணற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை இழைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
ஆவரங்கால் பகுதியில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான களஞ்சியம் மற்றும் தனியார் ஒருவருக்கு பங்கு உரித்தாகக் காணப்படும் கிணறு ஒன்றினுள் பொலித்தீன் கழிவுகளையும் இதர சில கழிவுப் பொருட்களும் வீசப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்;கேடும் துர்நாற்றமும் காணப்படுகின்றது. இதுபற்றி பலரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் சுகாதாரக் குழுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். சபையின் மாதாந்தக் கூட்டங்களிலும் உறுப்பினர்களால் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறான முறைப்பாடுகளையடுத்து பிரதேச சபையினர் பல தடவைகள் கூட்டுறவுச் சங்கத்திற்கு அறிவுறுத்தியும் அவர்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் அண்மையில் பிரதேச சபையின் பொறுப்பதிகாரியினால் அறிவுறுத்தல் கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கிணறு அமைந்துள்ள பகுதிக்கு நேற்றுச் சனிக்கிழமை காலை சுகாதார அதிகாரிகள் உடன் சென்று பார்வையிட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்; இவ் விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதேவேளை எதிர்காலத்தில் இவ்வாறாக வளவுகளில் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான விடயங்கள் குறித்து உரிமையாளர்கள் அசமந்தப்போக்குடன் பொதுநலனை மறந்து செயற்படுவர் ஆயின் பிரதேச சபைச்சட்டத்தின் வாயிலாகவும் சுகாதாரம் தொடர்பில் நாட்டிலுள்ள ஏனைய சட்டங்களின் அடிப்படையிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

