சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபாலவால் அவசர கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சிற்கு மற்றுமொரு சுகாதார பணிப்பாளரை நியமிக்கவுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த கடிதம் நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதமானது சுகாதார பணிப்பாளர் உள்ளிட்ட 14 அதிகாரிகளின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார துறைக்கு இன்னுமொரு பணிப்பாளர் அவசியம் இல்லை என்றும் அவர்களது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நியமனம் தொடர்பில் சுகாதார துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பல வருடங்களாக சுகாதார அமைச்சுக்குள் நிர்வாகிகளும், இலங்கை நிர்வாக சேவை மற்றும் கணக்காய்வாளர் சேவை அதிகாரிகள் ஒற்றுமையாகவே கடமைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பணிப்பாளரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார அமைச்சு உள்ளிட்ட 4 அமைச்சுகளுக்கு நிதி மற்றும் செலவினங்களுக்கான புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்படுவதற்கு அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வருடத்தில் 100 மில்லியனுக்கு அதிகம் செலவுகள் ஏற்படும் அமைச்சுகளுக்காக நிதி பணிப்பாளர் நியமிக்கப்படுவது சிறந்தது என நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.