சுதந்திரமாக உலா வரும் தமிழ் போர் குற்றவாளி
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் குழந்தைகளை இராணுவத்தில் இணைத்துக்கொண்டமைக்காக இனியபாரதி போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல கொலைகளுக்கும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களிலும் இனியபாரதி பிரதான பாத்திரம் வகித்தவர். கருணாவின் பாரளமன்றக் குழுவின் இயங்கு சக்தியும், அம்பாறை மாவட்டத்திற்கான ராஜபக்சவின் இணைப்பதிகாரியும் இனியபாரதியே.
அம்பாறை மாவட்டத்தில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த பலர் இனியபாரதியே தமது உறவுகளின் கொலைக்கும் காணமல்போதலுக்கும் பொறுப்பானவர் எனச்சாட்சியமளித்திருந்தனர்.
கல்முனை நீதிமன்றத்தால் பத்துவருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர். கிழக்கில் ஜனாதிபதித் தேர்தலிலிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் ராஜபக்ச அரசிற்கு வாக்களிக்குமாறு கொலைமிரட்டல் விடுத்தவர்.
இவை அனைத்துக்கும் மேலாக மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது உயர்ந்த தேசிய விருதான “தேசாபிமானி” விருது இனியபாரதிக்கு வழங்கப்பட்டது. இத்தனை ‘பெருமை’ களையும் படைத்த கிழக்கு மாகாணத்தின் கிரிமினல் இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இவர், உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக பதவி வகித்த துரையப்பா நவரத்தினராஜா, 2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் போனஸ் ஆசனம் மூலம் மீண்டும் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
பிரான்சிலுள்ள இலங்கை அரசு சார் அரசியல் குழுக்களுடனும் தனிநபர்களுடனும் இனியபாரதி நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.