சுமந்திரன், முதலமைச்சர் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு வேடிக்கையானது.

251

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செயகின்றன. சமீபகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின் நிரந்தர தீர்விற்கும் வழி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு :-

Mar232014

தமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், அவரின் பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுகின்றது. எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக வாதாடி அதில் படுதோல்வியடைந்ததை தவிர சுமந்திரன் வேறு எதையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ, அல்லது தமிழ் மக்களுக்கோ செய்யவில்லை.

கடந்த காலத்தில், வேலைவெட்டி இல்லாத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் எனவும், இராணுவத்தைவிட தமிழீழ விடுதலைப் புலிகள்தான் அதிகளவு தமிழ் மக்களை கொலை செய்தார்கள் என்றும் அதற்காக, விடுதலைப் புலிகளையும் விசாரணை செய்ய வேண்டுமென்றும் கூறியவர். அப்போதே அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் இன்று இவ்வாறு செயற்பட்டிருக்கமாட்டார். ஆனால் அவரை கட்சியின் தலைமை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினருக்காக போட்டியிட வைத்தது மட்டுமல்லாமல், குறிப்பாக சுமந்திரனை வெல்லவைக்க வேண்டிய கடமை வடபகுதி தமிழ் மக்களுக்கு உண்டு என கௌரவ இரா. சம்பந்தனே கூறியிருந்தார்.

மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்ற, அர்த்தத்திலேயே அதை அவர் கூறியுள்ளார் போல் தெரிகிறது. மக்களும் அவருக்கு வாக்களித்து அவரை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ‘முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராகக் கருத்துக்களை கூறியவர் சுமந்திரன். ஆனால் சமீபகாலமாக விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்த, முஸ்லிம் மக்களின் வெறியேற்றத்தை மட்டும், இனச் சுத்திகரிப்பு என்று கூறி அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, திரும்பத் திரும்ப ஆணித்தரமாகக் கூறுகின்றார். இவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்போது அவர் வட மாகாணசபை முதலமைச்சர் மீது குற்றம் சுமத்துகிறார். வட மாகாண முதலமைச்சரை தனிப்பட்ட தமிழரசு கட்சி மட்டும் தெரிவு செய்யவில்லை. பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் பொது வேட்டபாளராக களம் இறக்கப்பட்டு வெற்றியும் பெற்றார்.

அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிபெறாவிட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கணிசமான வாக்குகளை பெற்று வெற்றிக்கு வழிவகுத்ததில் எமக்கும் முக்கிய பங்குண்டு என்பதை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது சுமந்திரன் சார்ந்த கட்சியின் பொருத்தமில்லாத செயற்பாடாகும். அதுவும் சுமந்திரன், முதலமைச்சர் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு வேடிக்கையானது.

அதாவது தேர்தலுக்காக பணம் வசூல் செய்ய வெளிநாடுகளுக்கு போகவில்லை என்ற காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். மக்கள் அன்றாட தமது தேவைகளை பூர்த்தி செய்ய, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, அவர்களின் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதி வசூல் செய்து வாருங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டு, அவர் அவ்வாறு போகாமல் இருந்திருந்தால் அவர் மீது குற்றம் சுமத்துவதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் தேர்தல் செலவுகளுக்காக, சுமந்திரன் போன்ற வேட்பாளர்களை வெல்ல வைப்பதற்காக, அவர் மீண்டும் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நிதி வசூல் செய்ய கேட்டபொழுது முதலமைச்சர் மறுத்தமை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக புலம் பெயர்ந்த தமிழர்களால் சுமந்திரனிடம வழங்கப்பட்ட பெருந்தொகையான பணத்திற்கு இதுவரை கணக்கும் இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் போய்ச் சேரவும் இல்லை. அதனால் முதலமைச்சரை வசூல் செய்ய அனுப்பிவைத்து பழியையும் இலகுவாக அவர் மீது போட்டு தான் தப்பிவிடலாம் என்ற நினைப்பில் இருந்திருக்கின்றார். ‘ முதல் அமைச்சராகத் தெரிவு செய்த அனைத்து பங்காளிக் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தால், முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால் அவரை முதல் அமைச்சராகத் தெரிவு செய்த பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்து களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டது.

அவ்வாறு இருக்கும்போது அவர் எவ்வாறு கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பார். அதனால்தான் தான் ஒரு நீதியரசர் என்பதை நிலை நாட்டி, நடுநிலை வகித்தார். இதிலும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களின் எதிர்கால நலனுக்கு எதுவும் செய்யாமல் காணாமல் போன தம் உறவுகளுக்கு, என்ன நடந்தது என அங்கலாய்க்கும் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், முதலமைச்சர் மீது குற்றங்களை முன்வைத்து காலத்தை வீணடிக்கும் செயலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திக் கொள்ளவேண்டும். எதிர்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் மறைந்த அ.அமிர்தலிங்கம் அவர்கள் எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றார் என்பதை நான் சொல்லித்தான் சம்பந்தன் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவருக்கே அது நன்கு தெரியும்.

எனவே அவரைப் போன்று செயற்பட்டு எமது மக்களின் கனவுகளை நனவாக்குங்கள். சுமந்திரன் போன்றோர் மீது நடவடிக்கை எடுத்து நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். அவ்வாறு செய்ய முடியாது போனால், தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்யுங்கள். 2004ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிகளை வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்றதைத் தவிர, வேறு எதனையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை.

SHARE