சுமித்தை மன்னிக்க வேண்டும்

105

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித்துக்கும், பான் கிராப்டுக்கும் ஆஸ்திரேலியாவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அந்நாட்டு பத்திரிகைகள் அனைத்தும் முதல் பக்கததில் இருவரையும் சாடி செய்தி வெளியிட்டன.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட், தென்ஆப்பிரிக்க புறப்பட்டார். அவர் நாளை சம்மந்தப்பட்ட வீரர்கள், பயிற்சியாளர் லீமேன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்வார்.

இந்த விசாரணைக்கு பிறகே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கை இருக்கும். இருவருக்கும் ஆயுட்கால தடை அல்லது நீண்ட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுமித்தும், வார்னரும் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியுமா? என்பது சந்தேகமே.

இந்த நிலையில் ஸ்டீவன் சுமித்தை மன்னிக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் கிளார்க் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித்துக்காக வருந்துகிறேன். அவர் செய்தது எந்த விதத்திலும் நியாயமானது கிடையாது. கடுமையான விளைவுகளை சம்பந்தப்பட்ட வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

அவர்களை குற்றம் சாட்டியது போதுமானது. அவர்கள் செய்த தவறை மன்னிக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனி நடக்க கூடாது. நேர்மையான கிரிக்கெட்டை வரும் காலங்களில் நாம் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கிளார்க் கூறியுள்ளார்.

SHARE